Suganthini Ratnam / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்
முதலீட்டு வலயமாகவும முதலீட்டு வரி விலக்குள்ள மாகாணமாகவும் சுற்றுலாத்துறை மாகாணமாகவும் கிழக்கு மாகாணம் வரவு -செலவுத் திட்டத்திலே உள்வாங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் மார்க்கக் கடமை புரிவோர் உள்ளிட்ட பயனாளிகள் 131 பேருக்கு சைக்கிள்களும் மீன் வியாபாரிகள் 73 பேருக்கு தலா 6500 ரூபாய் பெறுமதியான டிஜிட்டல் தராசுகளும் 10 ணெ; தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மாவரைக்கும் இயந்திரங்களும் 7 குடும்பங்களுக்கு தலா 8000 ஆயிரம் பெறுமதியான தறப்பாள்களும் சமூர்த்திப் பயனாளிகளான 100 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்காக தலா 6800 ரூபாய் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், 'இவ்வாண்டில் இதுரை 16,271 பேர் கிழக்கு மாகாணத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றிருக்கின்றார்கள். இவர்கள் இலங்கை நாட்டுக்கு பெருந்தொகைக் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தந்தாலும் இவ்வாறு அவர்களது குடும்பங்கள் அனுபவிக்கின்ற அவலம் நீக்கப்பட வேண்டும்.
மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்களாக 16271 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பணி புரிகின்றார்கள் என்று சொன்னால் அது என்னைப் பொறுத்தவரையில் அந்த குடும்பங்களின் அங்கத்தவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதே அர்த்தமாகும்.
இந்த நிலை இனிமேலும் தொடரக்கூடாது என்பதே எனது அவாவாகும். நான் மத்திய கிழக்கிலே சுமார் 16 வருடங்கள் வாழ்ந்த அனுபவம் உண்டென்ற படியால் அந்த நாடுகளில் பணிப்பெண்களாகக் தம்மை வருத்தி பணிபுரியும் பெண்களின் துயரங்களை நேரடியாகக் கண்டுள்ளேன். அதனால்தான் எனக்குள் ஒரு வைராக்கியம் எடுத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து எந்தப் பெண்ணும் அடிமை வேலை செய்ய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லக் கூடாது என்று திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றேன். இந்த இலக்கு எனது கிழக்கு மாகாண தலைமைப் பொறுப்பை வகிக்கும் காலத்துக்குள் எட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளங்கள் விரவிக் கிடக்கின்றன. இந்த வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தி ஒட்டு மொத்த கிழக்கு மகாணத்தையுமே ஒரு பொருளாதார உற்பத்தி ஏற்றுமதி வலயமாகவும் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய இடமாகவும் மாற்றுவதற்கான திட்டங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம். அதன் காரணமாக முதலீட்டு வலயமாகவும், முதலீட்டு வரி விலக்குள்ள மாகாணமாகவும் சுற்றுலாத்துறை மாகாணமாகவும் கிழக்கு மாகாணத்தை பிரதம மந்திரி அவர்கள் அங்கிகரித்துள்ளார்கள். அதன் பிரதிபலிப்பாக இவ்வாண்டின் வரவு -செலவுத் திட்டத்திலும் எனது முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளதை இன்று அறிந்து மகிழ்வுற்றிருக்கின்றேன்' என்றார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025