2026 மே 07, வியாழக்கிழமை

dd

“சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்”

Janu   / 2026 மே 07 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து, கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (06) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒரு சில மீனவர் சங்கத் தலைவர்கள் உட்பட 47 பேர் சட்டவிரோத சுருக்குவலைகள் மற்றும் டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வளம் அழிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, 'கீரி மீன்' பிடிக்கும் வலையை நம்பியுள்ள சாதாரண மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுருக்குவலைகளைப் பயன்படுத்துவோர், மீன்கள் கரைக்கு வரும் வழியிலேயே அவற்றை வளைத்துப் பிடிப்பதால், சாதாரண மீனவர்களுக்கு ஒரு கிலோ மீன் கூடக் கிடைப்பதில்லை என கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத் தலைவர் நற்குணம் பத்மநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

சுருக்குவலை மூலம் ஒரே நாளில் ஒரு படகில் சுமார் 1,000 கிலோகிராம் வரை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவை சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு (கிலோ 300 ரூபாய்) விற்கப்படுவதால், ஏனைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. பூநொச்சிமுனை, காத்தான்குடி, செட்டிபாளையம், தேற்றாதீவு, மாங்காடு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, கல்லாறு மற்றும் பெரியநீலாவணை வரை இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.”என்றார்.

இச்சம்பவங்கள் குறித்துக் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் மற்றும் பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களுக்குத் தகவல் தெரிந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தனிசில் ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

"சட்டவிரோத சுருக்குவலைப் பாவனையை நிறுத்தத் தவறினால், எதிர்காலத்தில் மீன் இனங்களே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கடற்றொழில் நீரியல் வள உதவிப் பணிப்பாளர், விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையினருடன் இணைந்து இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கனகராஜா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .