Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 12 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம், எஸ்.கிருஸ்ணா
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில், 2008ஆம் ஆண்டு ஆயுதக் குழு ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலத்தைத் தோண்டி எடுக்கும் பணி, முனைக்காடு மயானத்தில் நேற்று (11) முன்னெடுக்கப்பட்ட போதிலும், குழிக்குள் சடலம் இல்லாததால் அப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான நாகராசா பிரசாந்தனின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே, சடலத்தைத் தோண்டி எடுக்கும் பணி, முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.
அவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஆயுதக்குழு ஒன்றின் முன்னாள் உறுப்பினர்களான “மகிழன்” என்றழைக்கப்படும் மேரி அன்டனி போல் அஜதீபன், “மதன்” என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, “லிங்கன்” என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய மூவரை, ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி ஆகிய பிரதேசங்களில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு, கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் என்.நவரட்ண, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (23) அனுமதிக் கோரியிருந்தார்.
நீதிமன்றத்தால் இதற்கான அனுமதிக் கிடைக்கப்பெற்றதையடுத்து, சடலத்தைத் தோண்டி எடுக்கும் பணிகள், மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில், நேற்று முன்தினம் (11) முன்னெடுக்கப்பட்டன.
சடலத்தைத் தோண்டும் பணிகள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் குழிக்குள் இருந்து எவ்வித மனித எச்சங்களும் மீட்கப்படாததால் தோண்டும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தோண்டப்பட்ட குழிக்கு அருகிலுள்ள குழியை சந்தேக நபர்கள் மீண்டும் அடையாளம் காட்டியதால், அந்தக் குழியைத் தோண்டுவதற்கு, மற்றுமொரு திகதி நிர்ணியிக்கப்பட்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago