2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சவுக்கடியில் நினைவஞ்சலி

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடிக் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவஞ்சலி   நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சவுக்கடி காட்டுப் பகுதியிலுள்ள  நினைவுத்தூபிப் பகுதியில் இடம்பெற்றது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அரியமலர் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தன்னாமுனைப் பங்கின் சவுக்கடி தூய யாகப்பர் ஆலய அடிகளார் அன்ரனி ராஜ்,தன்னாமுனைப் பங்கு போதகர் ஜீவானந்தம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சியாமளா ஆனந்த், சவுக்கடி மீனவர் சங்கத் தலைவர் கே. மரியசீலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு செப்டெம்பெர் மாதம் 20ஆம் திகதி காலையில் இராணுவ சீருடை தரித்து ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்தவர்கள் சிலர் தமது பிடியில் அகப்பட்ட சுமார் 31 பேரை படுகொலை செய்ததாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், தமது சவுக்கடி மீனவக் கிராமம் ஒதுக்குப் புறப் பகுதியாக இருப்பதால் இந்தப் படுகொலை விவகாரம் உலகத்தவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தன்னாமுனைப் பங்கின் சவுக்கடி தூய யாகப்பர் ஆலய அடிகளார் அன்ரனி ராஜ் உரையாற்றுகையில்,

ஜனநாயகமற்ற யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவர முடியாத சூழ்நிலை இருந்தது.

இப்பொழுதும் படுகொலை செய்யப்பட்ட பலரின் உடல்கள் மாத்திரமல்ல உண்மையும் கூட புதைக்கப்பட்டுத்தானுள்ளது.

 அவர்களது உறவினர்களின் வேதனைகளிலிருந்து இப்படுகொலைகள் நீங்காத துயரங்களாக இடம்பிடித்திருக்கின்றன.

நாங்கள் சிந்துகின்ற கண்ணீர்த் துளிகளும், பிரார்த்தனைகளும் இனியும் இந்தப் பூமியில் அநியாயமாக எவரும் இரத்தம் சிந்தி விடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நினைவஞ்சலிகள் அமைந்திருக்கின்றன.

நீதி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் பலவிதமான உடலியல் உபாதைகளுக்கும் மனிதர்களை ஆழ்த்துகின்றது என்ற அறிவியல் யதார்த்தத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீதி வெளிக் கொண்டு வரப்படவேண்டும். உள்ளத்தால் காயமடைந்தவர்கள் குணப்படுத்தப்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X