2025 மே 22, வியாழக்கிழமை

சிறந்த தமிழ் தலைமைகளாலேயே, அதிகாரப் பகிர்வுக்கு இணக்கப்பாடு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மிகச் சிறந்த தமிழ் தலைமைகள் உள்ள காரணத்தால், அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் மக்கள் விடுதலை முன்னணி இணக்கப்பாடு காட்டியிருக்கிறார்கள்” என, இலங்கை தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

 

“எமது தலைவர்களுக்கு உள்ள மிகப் பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில், எமது கோரிக்கைகளில் அதி உச்சமாகப் பெறக்கூடிய அதிகாரங்களை உள்ளடக்கி, முழுமையான இணக்கப்பாட்டுடன், அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, செங்கலடி சீனிப்போடியார் ஞாபகர்த்த மண்டபத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி ஏறாவூர்ப்பற்று கிளைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நாடாளுமன்றம் அரசமைப்பு சபையாக உருவாக்கப்பட்டு, 6 குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு குழுவும் யார் யாருக்கு என்ன கொடுக்கப்பட வேண்டும் என உப குழுக்களின் அறிக்கையிலே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

“காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுங்கம், வெளிநாட்டு உறவு, விமானப் போக்குவரத்து, தபால் மற்றும் ரயில் போக்குவரத்து போன்ற முழுநாட்டுக்கும் தேவையான விடயங்கள் மத்திய அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும்.

“கல்வி, சுகாதாரம்,மீன்பிடி, கூட்டுறவு போன்ற சகல விடயங்களும் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

“உலக நாடுகள் அங்கிகரிக்கக் கூடிய தலைவராக, இரா. சம்பந்தன் ஐயா காணப்படுகிறார். நாட்டிலுள்ள இரு தலைவர்களும் அவரைக் கண்ணியமாக மதிக்கின்றார்கள்.

“புதிய அரசமைப்புச் சட்டம், இந்த ஆண்டு முடிவுக்குள் நிறைவேற்றப்படும். இதற்காக சிங்கள தலைவர்கள் பல்வேறு வகையான சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசுகின்றார்களா, என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள்.

“அதிகளவான பேச்சுவார்த்தைகள், இராஜதந்திரம் விடயங்களில் அவர்களுடைய புலமை தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைமைக்கு இருக்கின்ற புலமை அளவுக்கு அவர்களுக்கு இல்லை. பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது பலவிதமான குழப்பங்கள் வரும் அவற்றை கவனமாக சீர்செய்துகொண்டு செல்ல வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .