2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘ஜகத் வழக்கில் நிரூபிக்கவும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ் 

இறுதிக் கட்டப் போரின் போது, சர்வதேச போர் நியமங்களுக்கு அமைய அரச படையினர் கண்ணியமாகச் செயற்பட்டார்கள் என்றால், அதனை முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான வழக்கில் நிரூபித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கு உள்ளது” என, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். 

“ஜகத் ஜயசூரிய, போர்க் குற்றமிழைத்துள்ளார் என்றும் அவருக்கு எதிராக, தான் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். இதன் மூலம் உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்” என்றும் துரைராஜசிங்கம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதிக்கு கொங்ரீட் இடும்பணியை, நேற்று (05) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

கிழக்கு மாகாணசபையின் பிரமான அடிப்படையிலான கொடை எனும் திட்டத்தின் கீழ், இவ்வீதிக்கு, 1.5 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முள்ளிவாய்க்கால் அனர்த்தம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய அனைத்துக் கருத்துகளுக்கும் அரசாங்கம் கடந்த காலங்களில் மாற்றுக் கருத்துகளையே கூறிவந்தது. 

நாங்கள், தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, எங்களுடைய அனைத்து கூற்றுக்களுக்கும் ஆம் என்ற பதிலே தற்பொழுது வந்துகொண்டிருக்கிறது. 

போர்க்குற்றம் நடைபெற்றுள்ளது, விசாரணை சர்வதேச நீதிமன்றம் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும், சர்வதேசம் தலையிட வேண்டும் என்று நாங்கள் கூறியபோது, அனைத்தையும் மறுத்தார்கள். ஆனால், சகல விடயங்களும் சர்வதேசத்தின் முன்னிலையிலேயே தற்போது நடைபெறுகிறது. 

போர்குற்றம் நடைபெறவில்லை என்பதை அரசாங்கம் திரும்ப திரும்ப வலியுத்தி வந்தநிலையில் தற்போது முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கிலே போர்க் குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.  

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கூறுவதற்கு முன்னரே அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார் என்றும் அவருக்கு எதிராக, தான் சாட்சியமளிக்க தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

உண்மைகள் வெளிவரவிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த விடயங்களை அரசியலாக்க நினைப்பது உண்மையை மூடிமறைக்கின்ற முயற்சியாக இருக்கும். உண்மையை மூடி மறைக்க நினைப்பது வெற்றிபெறக்கூடிய செயற்பாடு அல்ல. 

ஒன்றிணைந்த எதிரணியினரும், ஏனையவர்களும் இதனை நாட்டுக்கு எதிரானதாகவும் படை வீரர்களுக்கு எதிரானதாகவும் கூறிக்கொள்ள முற்படுவதுதற்கு காலமதான் பதில் சொல்லும். 

எங்களுடய படை மிகவும் கண்ணியமாகச் செயற்பட்டது என்றால், அதனை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. எந்தவித பயமும் இல்லாமல் அதனை நிரூப்பிக்க வேண்டும். 

தங்களுடைய படை, சர்வதேச நியமங்களைக் கடைப்பிடித்து போரை செய்தது என்பதை நிரூபிப்பதற்கு அரசாங்கத்துக்கு, நல்லச் சந்தர்ப்பம் இருக்கிறது. இதற்கு முதன்முதலான சான்றாக அமையப்போவது முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் வழக்காகும். 

முள்ளிக்வாய்கால் அவலத்தின் போது போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகிறது. ஆனால், போர்க்குற்றம் நடைபெறவில்லை என, அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறாயின் போர்க்குற்றம் நடைபெறவில்லை என முன்னாள் இராணுவத்த தளபதி ஜகத் ஜயசூரியவின் வழக்கில் நிருபித்துக் காட்ட வேண்டும்.  

உங்கள் தரப்பிலிருந்து எங்களுக்காக சாட்சியமளிக்க சரத் பொன்சேகா முன்வந்திருக்கின்றார். உண்மை நிச்சயம் வெளிவரும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல நிவாரணம் அதனடிப்படையில், கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X