2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தமிழர்களைப் பகடைக்காயாக்கி ‘இலங்கையை இந்தியா பாதுகாக்கின்றது’

கனகராசா சரவணன்   / 2018 மே 23 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குமாக தமிழர்களை பகடைக்காயாக வைத்து, இலங்கை அரசாங்கத்தை, இந்தியா பாதுகாத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய நலன்கருதி, இந்தியா எந்த நிலையிலும் செயற்படவில்லை என்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்தி, வல்லரசு நாடான சீனாவுடன் போட்டியிடுவதற்காக, இலங்கையை இந்தியா பயன்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில், நேற்று (22) மாலை இடம்பெற்ற, கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “படித்த புத்திஜீவிகள் சிலர், தங்களுடைய சுயநலத்துக்காகவும் பதவி நிலைகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டுவருகின்றனர்.

“இதற்குப் பின்னால், பல துரோகக் கும்பல்கள் தங்களுடைய செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக செய்து கொண்டுவருவதை நாங்கள் அண்மைக்காலமாக காணக்கூடியதாக இருக்கின்றது" என்று தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய போராட்டம், 70 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்றுவரும் நிலையில், அதில் சுயநலம் காணப்பட்டிருக்கவில்லை எனவும், அப்போராட்டம் புனிதமானது எனவும் தெரிவித்த அவர், "பெரும்பான்மையினப் பேரினவாதம், எங்கள் மக்களை அடக்கி ஒடுக்கி வந்த காலப்பகுதியில், அவ்வப்போது மக்கள் எதிர்ப்பையும் எங்களுடைய அரசியல் அபிலாஷைகளையும் மிக வலிமையாக எதிர்த்துக் காட்டினார்கள்" என்று தெரிவித்தார்.

மக்களுடைய எதிர்ப்பு, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகத் தான், முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை வந்தது எனவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன், அண்மையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை இதன்போது விமர்சித்த அவர், அதைத் தமிழ் மக்கள் ஏற்க வேண்டுமென்பதற்காக, த.தே.கூவுடன் சேர்ந்து, அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X