2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திராய்மடுவில் இலவச வைத்திய முகாம்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

தந்தை செல்வாவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், திராய்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு திராய்மடுவில் இன்று (2) காலை இலவச  வைத்திய முகாம் ஒன்று இடம்பெற்றது.

திராய்மடு மற்றும் பாலமீன்மடு பகுதி மக்களின் நன்மை கருதி, வாமி நல்லதம்பி பாலர் பாடசாலையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைத்தியமுகாமின் ஆரம்ப நிகழ்வில், கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன், கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், இலங்கை குடும்ப திட்டச்சங்கத்தின் சுகாதார சேவை நிலையத்தினைச் சேர்ந்த செல்வி சுஜானா யோகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், குடும்பநல வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான ​டொக்டர் கே.அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்புபீட விரிவுரையாளர் டொக்டர் ஏ.சிர்பான் ஆகியோர் வைத்திய முகாமை நடாத்தியதுடன், இலங்கை குடும்ப திட்டச்சங்கத்தின் சுகாதார சேவை நிலையத்தினால் இரத்தப் பரிசோதனைகளும் நடாத்தப்பட்டன.

இதில் கலந்து கொண்ட தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன் பேசுகையில், “தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் அர்ப்பணிப்பு இன்மை, ஒற்றுமையின்மை, அவர்களின் சுயநலங்கள் காரணமாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்தும் நழுவிச் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சிவநாதன், “தந்தை செல்வா முத்திரை பதிக்கப்பட்ட ஒரு தியாகி மட்டுமல்லாமல் சிறந்த சட்டத்தரணியுமாவார். அதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட வருமானத்தையெல்லாம் கொண்டுதான் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பினார். அந்த கட்சி மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரும்பாடுபட்டார். ஆகவே, தமிழ் மக்கள், தந்தை செல்வாவின் வழியில் செல்ல நினைக்கும் அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு தங்களது ஆதரவினை நல்கவேண்டும்” என்று மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X