Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் பட்டதாரிகள் இன்று (28) ஆர்ப்பாட்ட மொன்றில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
தமது கைக்குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும், அரச தொழிலில் ஏற்கெனவே இருக்கின்ற பட்டதாரிகளுக்கு மீண்டும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் 1,400க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 1,119 பேருக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மிகுதியான வெற்றிடத்துக்கும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை நியமித்து நியமனங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளால் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கவென நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் 6,800 பட்டதாரிகள் தோற்றியதுடன், அதில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று 2,868 பட்டதாரிகள் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் 1,119 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .