2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 28 மாணவர்கள் வவுணதீவில் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 17 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் 28 மாணவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பிரதேச செயலகப் பிரிவின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.  

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  பாவற்கொடிச்சேனை, கண்ணகிநகர், மாவிலங்கையடிச்சேனை உள்ளிட்ட கிராமங்களில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி மீண்டும் பாடசாலைகளில்  சேர்க்கும் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய சுமார் 36 பேர் 04 குழுக்களாகப் பிரிந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது  03 தொடக்கம் 08 மாதங்களாக பாடசாலைகளுக்குச் செல்லாதிருந்த 28 மாணவர்களைக் கண்டுபிடித்து,  அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டதுடன், அவர்களின் பிரச்சினை தொடர்பிலும் ஆராயப்பட்டு அவர்கள் மீளப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களின் சீரான பாடசாலை வரவை உறுதிப்படுத்துவதற்காக அதிபர், வகுப்பு ஆசிரியர், பெற்றோர் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள் ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை  மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு 726 மாணவர்கள் இடைவிலகியவர்களாகக் கணிக்கப்பட்டுள்ளனர்.
வலய ரீதியான கணக்கெடுப்பின் படி மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 245 மாணவர்கள், மட்டக்களப்பு மத்தி மற்றும் மட்டக்களப்பு வலயங்களில் 157 மாணவர்கள், பட்டிருப்பு வலயத்தில் 107, கல்குடா வலயத்தில்  60 மாணவர்கள் இடைவிலகியவர்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X