2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய தேரரை நியமிக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையிலுள்ள தேரரரை இடமாற்றுமாறும் அவருக்கு பதிலாக மற்றுமொரு தேரரை நியமிக்குமாறும் கோரி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சம்மேளத்தின் தலைவர் ஏ.எம்.எம்.தௌபீக் மற்றும் செயலாளர் ஏல்.எல்.எம்.சபீல் நழீமி ஆகியோர் கையொப்பமிடப்பட்ட குறித்த கடிதம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'நல்லாட்சி அரசாங்கத்தினால், இன நல்லுறவு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆங்காங்கே அவற்றுக்கு எதிரான சம்பவங்கள் பல நடைப்பெற்று வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி  சுமனரத்திண தேரர், இந்தப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கெதிராக, மோசமான முறையில் தன்னுடைய செயற்பாடுகளை அரங்கேற்றி வருகின்றார்.

கடந்த யுத்தகாலத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மூவின மக்களும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த தேரருடைய மோசமான செயற்பாடுகள், எமது மூவின சமூகத்தையும் பாதித்து விடுமோ என்று நாம் அஞ்சுகின்றோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கிராமசேவை உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரிகள் போன்றோர்களின் பணியை செய்யவிடாது, இடையூறு செய்வதையும் பேசத்தகாத வார்த்தைகள பிரயோகித்து ஏசுவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எந்த சமூகத்திலிருந்து இன நல்லுறவுக்கு அச்சுறுத்தல் வருமாக இருந்தாலும், அதற்கான உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தங்களது தார்மிகக் கடமையாகும். எனவே, எமது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக, எமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றோம்' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X