Princiya Dixci / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் எந்தவொரு தனி நபரும் போஷாக்கில்லாமலோ பட்டினியாகவோ மடிய அனுமதிக்க முடியாது என மட்டக்களப்பு விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராசா தெரிவித்தார்.
பிரதேச விவசாயப் போதனாசிரியர் பி. ரவிவர்மன் தலைமையில், காலநிலை மாற்றத்துக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் வீட்டுத் தோட்ட வயல் விழா, நேற்று (07) நடைபெற்றது.
பெண்கள் விவசாய அமைப்பின் தலைவி பி.லோகரஞ்சினியின் வந்தாறுமூலை பலாச்சோலை கிராம தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட பீர்க்கு, பயறு, மிளகாய், அவரை, தக்காளி, கெக்கரி மற்றும் கௌபி உட்பட பல்வேறு உப உணவுப் பொருட்களும் காய்கறிகளும் அறுவடை செய்யப்பட்டன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய விவசாயப் பிரதிப் பணிப்பாளர் பேரின்பராசா, “நாடும் நமது மாவட்டமும் சகல கால நிலைகளுக்கும் உணவு உற்பத்தியை விளைவிக்கக் கூடிய நிலபுலன்களைக் கொண்டமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏதோவொரு பயிர்ச் செய்கையை இங்கு மேற்கொள்ளலாம்.
“மட்டக்களப்பு மாவட்டமும் நில வளம் நீர் வளம் இயற்கை வளம் என சகல வளங்களும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளதால் இந்த மாவட்டத்து மக்கள் போஷhக்கின்றியோ பட்டினி கிடந்தோ அவஸ்தைப்பட வேண்டியமில்லை.
“இலங்கையர்களாகிய நாம் உணவுப் பொருள்களுக்காக வெளிநாட்டு இறக்குமதியை எதிர்பார்த்து கையேந்த வேண்டிய நிலை. அவ்வாறு சோம்பிக் கிடப்பது அவமானகரமான செயலாகும்.
“நஞ்சற்ற மரக்கறிகளை காய்கறிகளை உணவுப் பொருட்களை நாம் உற்பத்தி செய்து இந்த மாவட்டத்து மக்களையும் இலங்கை மக்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மாற்றுத்திறனாளியான தனது கணவரின் அயராத மனம் தளராத முயற்சியோடு அவரது மனைவியான லோகரஞ்சினி இந்தத் வளம்மிக்க வருமானம் ஈட்டும் தோட்டத்தை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார். இது ஏனையோருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் உந்து சக்தியாகவும் இருக்கும்” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பதூர்தீன், பாடவிதான உத்தியோகத்தர் வி.இளமாறன், வந்தாறுமூலை வலய பெண்கள் விவசாய அமைப்பைச் சேர்ந்த விவசாயப் பெண்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .