2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டம்; மோகனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2021 மே 06 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரும் செங்கலடி செல்லம் சினிமா குழுமத்தின் உரிமையாளருமான கணபதிப்பிள்ளை மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோகன், செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 2ஆம் திகதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகனின் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து டேக் செய்தவர்களின் பதிவுகள் எனவும் அவற்றில் அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும்  தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, மோகனிடமிருந்து நவீன கணினி மற்றும் அலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை மோகன் பதிவேற்றியுள்ளார் எனவும் சந்தேகநபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்குட்படுத்திய போது அவர் அத்தகைய கருத்துகளை பதிவேற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மோகனது கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

மோகன் 74 மணித்தியாலங்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஏ.இளங்கோவனினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்று (05) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மோகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவ்வேளையில், சந்தேகநபரான மோகனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .