2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக்குள் அடாவடி

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 02 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்தின் சொத்துகள், இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்படுவதையும் விரும்பத்தகாத செயல்களை மேற்கொள்வதைக் கண்டித்தும் நடவடிக்கையெடுக்குமாறு கோரியும், இன்று(02) காலை பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அதேவேளை, இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

திராய்மடு தமிழ் வித்தியாலயத்துக்குள், நேற்று (01) மாலை அத்துமீறிச்சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், மாணவர்களின் புத்தகங்கள், ஆசிரியர்களின் இருக்கைகள், ஆவணங்களை எரியூட்டியுள்ளதுடன், மேசைகளில் மலம் கழித்தும் சென்றுள்ளனர்.

பின்தங்கிய பாடசாலையான இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக அமைக்கப்பட்ட பதாகைகளும் செயற்பாட்டுப் பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் மாணவர்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில், இவ்வாறான விரும்பத்தகாத செயல்களால் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி திஹகவத்துற, மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் ஆகியோர், மோப்பநாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் வருகைதந்து, பாடசாலை அதிபருடனும்  பெற்றோர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, குறித்த பாடசாலைக்கு இரவு நேரக் காவலாளி ஒருவரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுப்பதாக எஸ்.வியாழேந்திரன் எம்.பி இங்கு கருத்துத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X