2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’பிரித்து வைக்கும் கல்வி முறையை மாற்ற வேண்டும்’

Editorial   / 2018 மே 10 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கைக் கல்வி முறைமைய, 'பிரித்து வைக்கும்' முறை என வர்ணித்த, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் செயற்பாட்டாளரும் திரைப்பட இயக்குநருமான விமுக்தி ஜயசுந்தர அம்முறைமை பற்றி, சர்வமத சகவாழ்வுச் செயற்பாட்டாளர்களும் சமூகங்களை வழிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சர்வமத சகவாழ்வுச் செயற்பாட்டாளர்களை அண்மையில் சந்தித்த போதே,  அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் 'இலங்கைக் கல்வி முறைமையின் ஒழுங்குபடுத்தலில், மாணவர்களை ஏதோவொரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ,  இனவாத, மதவாத, மொழிவாத அடிப்படையிலான பாடசாலைகளில் கற்கச் செய்வது வழமையாக உள்ளது.

'பின்னர் எந்தவிதமான ஆயத்தப்படுத்தல்களும் இல்லாமல் சம்பந்தப்பட்ட மாணவனோ, மாணவியோ உயர்தரத்தின் பின்னர், பாடசாலையை விட்டு வெளியேறியதன் பின்னர், திடீரென 'இன ஒற்றுமையாக இருந்து கொள்' என்று கூறுவதும் சகவாழ்வைப் பற்றிப் போதிப்பதும் நகைப்புக்கிடமாக இருக்கிறது.

'கல்விக் கூடாகவே பிரிவினையை வளர்த்து விட்டு, பின்னாட்களில் சகவாழ்வையும் சமாதானத்தையும் பற்றிப் பேச, நமக்கு என்ன அருகதை இருக்கிறது?' என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் கல்வி முறைமை, அறிவுசார்ந்து காணப்படாமல், இனம், சமயம், மொழி சார்ந்து காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சகவாழ்வை எவ்வாறு மீளக் கட்டியெழுப்பலாம் என்பது பற்றி, கலைஞர்கள் கவலையோடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

'வன்முறைகளில் நாம், ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர் என்று களத்தில் நின்று கர்ஜிப்பதால், இலங்கையர் என்ற சிறப்பு அடையாளம் ஒருபோதும் வரப்போவதில்லை.

'முதலில் நாம், மனிதாபிமானமுள்ள மனிதர்கள் என்பதை நிரூபித்தாக வேண்டும். அதன் பின்னர் இலங்கைத் தாயின் புதுப்பிக்கப்பட்ட, பிரிக்க முடியாத புதல்வர்கள், புதல்விகள் என்பதை புதிதாகச் சொல்லியாக வேண்டும்' என, அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .