2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘பெண்களை பெண்களே ஆழ வேண்டும்’

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பெண்கள்தான் பெண்களின் பிரச்சினைகளைப் பேசவேண்டியவர்களாக இருக்கின்றனர். அதனால்தான், கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவருகின்றோம்” என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

“விடுதலைப்புலிகள் காலத்தில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், துஷபிரயோகங்கள் தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், இன்று அவை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. கிழக்குடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வடக்கில் அதிகரித்துள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு, தனது பன்முகப்படுத்தப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் டப்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மண்டபத்தில் இன்று (29) நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“வடமாகாணசபையில் 2018ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நிதியொதுக்கீடுசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

“யுத்தம் காரணமாகத் தமிழர்கள் கல்வியையும் பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர். பொருளாதாரத்தை வளர்க்கும் அதேவேளையில், கல்வியில் அக்கறைசெலுத்தவேண்டிய தேவையும் இருக்கின்றது.

“பல்கலைக்கழகத்துக்காக ஒரு மாகாணத்தில் இருந்து இன்னுமொரு மாகாணத்துக்குச் செல்லும்போது, மாணவர்களின் தேவை அதிகரிக்கின்றது. வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையில் மாணவர்கள் இருக்கின்றனர்.

“வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முனைகின்றோமோ அவ்வாறு, கிழக்கில் இருக்கின்ற மாணவர்களின் கல்வியை கருத்தில்கொண்டு கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முன்னிற்கவேண்டும்.

“இதேவேளை, மாணவர்கள் மத்தியில் இருந்து மாணவர்களின் நலன்கருதிய அரசியல் தலைமைகள் உருவாகவேண்டும். அதிலும், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

“வடமாகாணசபையில் 38 உறுப்பினர்களில் நான் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினராக இருக்கின்றேன். 52 வீதமான பெண்கள் இருக்கின்ற இலங்கையில் 1.8 சதவீதமான பெண்கள் மட்டுமே, உள்ளூராட்சிமன்றத்தில் உள்ளனர். 2.8 சதவீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் உள்ளனர்” என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X