2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர்களின் எதிர்ப்பால் உயர்கல்வி அமைச்சரின் வருகை இரத்து

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

 

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விஜயம் செய்து அங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருந்தபோதும், அங்கு 'அமைச்சர் வருவதை தாங்கள் விரும்பவில்லை' என்று மாணவர்கள் எதிர்ப்புக் காட்டியதால் அமைச்சர் வராமலேயே திரும்பிவிட்டார்.

மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சர் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் சென்று அங்கு மாணவர்கள் தங்கும் விடுதியைத் திறந்து வைத்தப் பின்னர் உரையாற்றுவதாகவும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது.

இது பற்றி அமைச்சரின் ஊடகப் பிரிவு நேரடியாகவே ஊடகவியலாளர்களைத் தொடர்பு கொண்டு பிற்பகல் 2.30 இற்கு வருகை தருமாறும் கேட்டிருந்தது.

எனினும், கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் வருவதைத் தாங்கள் 'விரும்பவில்லை' என்று பெரிய பதாதையைத் தொங்க விட்ட மாணவர்கள் கறுப்புக் கொடிகளை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கட்டி, தங்களது நெற்றிகளிலும் கறுப்புப் பட்டியணிந்து வழிமறித்து நின்றனர்.

அமைச்சர் வந்து தாங்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் வாயிற் கதவில் வைத்தே தீர்வு சொன்ன பிறகே பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு உள்ளே செல்ல அனுமதிப்போம் என்று வழிமறித்து நின்றனர்.

மேலும், பல்கலைக் கழகத்தில் தங்களுக்காக  நிறைவேற்றித் தரப்பட வேண்டிய பல கோரிக்கைகளையும் பதாதைகளில் குறிப்பிட்டு அமைச்சரின் வருகையை மாலை 6 மணி வரைக் காத்திருந்தனர்.

எனினும், அமைச்சர் வந்தாறுமூலை நிகழ்வுக்கு வராமலேயே மட்டக்களப்பு நகரோடு நிகழ்வுகளை முடித்துச் சென்று விட்டதால், கறுப்புக்கொடி எதிர்ப்புக்காட்டிய மாணவர்கள் ஏமாற்றத்தோடு கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X