2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் இன்மையால் 60 கணினிகள் செயலிழப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள  ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்காக, கடந்த 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 60 கணினிகள், இன்னும் பயன்படுத்தப்படாமல் செயலிழந்து போய் உள்ளதாக, குறித்த வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என்.இராஜதுரை, நேற்று வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'கடந்த கால யுத்தத்தின் போது, பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள இந்த பாடசாலையில், கடந்த 20.02.2013 அன்று தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதேவேளை, பாடசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக, எமது வித்தியாலயம் கடந்த 01.05.2014 அன்று ஏ.பி தரப்படுத்தல் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டது' என்று அவர் கூறினார்.

'இதன் பின்னர், தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்துக்கான சுமார் 60 கணினிகள் கடந்த 19.09.2014 அன்று வழங்கப்பட்டன.

எனினும், இக்கணினிகள் கொண்டுவரப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகின்ற போதிலும், இதனை பொருத்துவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்காகவோ மின்சார இணைப்புக்கள் வழங்கப்படாமல் உள்ளது' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது சம்பந்தமாக, மத்திய கல்வி அமைச்சு முதல் மாகாண கல்வி அமைச்சு வரை தெரியப்படுத்தியிருந்தும், இதற்கான எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, ஆய்வுக்கூடம் இருந்தும் அதன் மூலம் எந்தவொரு பயனையும் பெற முடியாத மாணவர்களின் நலன் கருதி, இந்த தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை உரியவர்கள் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X