2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மங்களராம தேரருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 நவம்பர் 15 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, மங்களாராம விகாராதிபதியினால், அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டமையைக் கண்டித்தும் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் பட்டிப்பளை பிரதேச செயலக வாயிற்கதவினைப் பூட்டி, பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால், இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 8.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கொக்கட்டிச்சோலை - வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்;தப்பட்டது.

பல காலமாக அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்களை குறித்த மதகுரு விடுத்துவரும் நிலையில், இதுவரையில் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிக்கு முன்பாகவே, மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அதிகாரியை மதகுரு திட்டியபோது பொலிஸ் உயர் அதிகார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் காணமுடிந்தது. இது, இந்த நாட்டில் சட்ட நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதுடன், நல்லாட்சி என்று சொல்லப்படுவதையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

குறித்த மதகுருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற உறுதி மொழியையடுத்து, காலை 10.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன், பிரதேச செயலக நடவடிக்கைகளும் ஆரம்பமாகின.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல்வாதிகள், பொதுமக்கள் அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X