2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி, பிரதமர் விஜயம்

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், நாளை மறுதினம் புதன்கிழமை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அன்றையதினம் காத்தான்குடிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் சிறப்புமிக்கதாக அமையுமென, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அத்துடன், அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாகவும் இக்கூட்டம் வரலாற்றில் பதிவாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“காத்தான்குடியில் ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை பி.ப. 4 மணிக்கு இடம்பெறவுள்ள பிரதான கூட்டத்தில், இப்பிரதேசத்தைச் சேர்ந்த அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறுபான்மை மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள், சிறுபான்மை சமூகத்தினரே. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவை மீண்டும் நிரூபிக்கின்ற வகையில் காத்தான்குடி கூட்டம் அமையும்.

“காத்தான்குடி நகர சபையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் வெல்லும்.

“அவ்வாறு வெற்றி பெற்றால் அது தேசிய ரீதியில் பேசப்படும் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறும். அது எமது சமூகத்துக்கும், காத்தான்குடி மக்களுக்கும் ஏராளமான நன்மைகளை பெற்றுத் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர தனியார் பஸ் நிலைய முன்றலில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இடம்பெறும் உள்ளுராட்சித் தேர்தல் சம்பந்தமான பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதித் தினமான 31ஆம் திகதி நாட்டின் உயர் தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இடம்பெறவுள்ள தத்தமது கட்சிகளின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆதரவுப் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள வருகை தரவிருப்பதால், இப்பொழுதிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X