2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’முஸ்லிம்களை நிந்திப்பது ஆரோக்கியமானதல்ல’

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு,  முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களது மதம் சார்ந்த செயற்பாடுகள் மீதும் ஆங்காங்கே நிந்தனை சம்பவங்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளாகிய தம்மிடம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருப்பது, ஆரோக்கியமானதல்ல என்றும் எனவே சட்ட வரையறையைத் தாண்டிய பொலிஸாரது குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா  தெரிவித்துள்ளார்.

கல்குடா பிரதேசத்தில் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு, பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமைத் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்துரைத்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் பள்ளிவாசல்கள், வீடுகள், வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் அரபு எழுத்துப் பதாதைகளை, அடையாளப் பலகைகளை அகற்றுமாறு, பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமைத் தொடர்பில் ஏற்கெனவே மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க தயானந்த பெரேராவின் கவனத்துக்கும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்று உடனடித் தீர்வுகள் காணப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் கல்குடா பிரதேசத்தின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள், வாகனங்கள் மற்றும் பொது குழாய் கிணறு என்பவற்றில் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கல்குடா பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாலும் முக்கியஸ்த்தர்களாலும், குறித்த விடயம் தொடர்பில் எனது கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.  பிரதி பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு தனது அதிருப்தியையும் கண்டணத்தையும் தெரிவித்ததுடன், குறித்த விடயத்தில் மாவட்டத்துக்குப் பொதுவான முறையில் அனைத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டேன்.

அரசினால் வழங்கப்பட்ட சில அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் தவறான புரிதல்களை கொண்டிருப்பதாக இவ்வாறான தொடர் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகிறது, எனவே இதனை முழுமையாக தீர்ப்பதுத் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை அவசியம் பொலிஸ் தரப்பு அமுல்படுத்தி, மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

அத்துடன் இது தொடர்பில், மீளவும் ஏதும் பொலிஸாரால் அழுத்தங்கள் வரும் இடத்து மக்கள் தன்னையோ, பிரதிப் பொலிஸ் மா அதிபரையோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும், வீண் குழப்பங்களோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை என்றும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X