2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘முஸ்லிம்கள் அரசியல் உரிமையை இழந்து வருகின்றார்கள்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்கள் தமது அரசியல் உரிமையை இழந்து வருகின்றார்கள் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் ஆர்.அப்துர் ராசீக் தெரிவித்தார்.

 

காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாப்பு விளக்கக் கூட்டத்தின் போதே,  அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எதனை முஸ்லிம் சமூகத்துக்காகச் சாதித்துள்ளார்கள் என்று பார்த்தால், எதையுமே அவர்கள் சாதிக்கவில்லை.

“இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பல்வேறு அநியாயங்கள் நடக்கின்ற போதெல்லாம், காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் இவர்கள் எடுக்கப்படவில்லை.

“பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன, முஸ்லிம்களின் பூர்வீக தளங்கள் பறிபோயுள்ளன, எல்லை நிர்ணயத்தில் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது, வட்டாரப் பிரிப்பில் அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன, சொந்தக்காணியில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது, இத்தனை நடந்தும் இவர்கள் இன்னும் தமது நலத்தையே பாதுகாத்து வருகின்றார்கள்.

“அமைச்சுப் பதவிகளை இலக்காகக் கொண்டு மாத்திரமே இவர்கள்  செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்குத் தேவையெல்லாம் பட்டம், பதவிகளே தவிர, சமூக உணர்வு கிடையாது.

“அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்தில் கல்முனை மக்களைக் காட்டிக் கொடுத்து உரையாற்றினார்.

“சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்களிடையே விரிசலை உண்டு பண்ணும் சதி வேலைகளையும் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளே செய்து வருகின்றனர்.

“சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரச்சினையை வைத்து இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதை நாம் பார்க்கின்றோம்.

“முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து பிழைப்பு நடத்தும் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை, மக்கள் ஒரு போதும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பக் கூடாது. இவர்களை பாகிஸ்தான் நாட்டுக்கே அனுப்ப வேண்டும்.

“இவர்களைப் பற்றி விமர்சித்தால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அரசியலுக்கு வரப்போகின்றது எனக் கூறகின்றார்கள். ஒரு போதும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அரசியல் செய்யாது. எந்தவொரு தேர்தலிலும் எமது ஜமா அத் போட்டியிடாது என்பதை நாம் தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்.

“முஸ்லிம் சமூத்துக்கு அநியாயங்கள் இழைக்கப்படும் போது, அவற்றுக்கெதிராக நாம் குரல் கொடுப்போம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X