Kogilavani / 2017 மார்ச் 12 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
“நடந்து முடிந்த யுத்தம் எதற்காகச் செய்யப்பட்டது என்று யுத்தம் செய்தவர்களுக்கே, காரணம் தெரியாமல் போய் விட்டது” என, சிவில் பாதுகாப்புக்குப் பொறுப்பான மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரட்ணம் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை, காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று சந்தித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பில், அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இந்நாட்டிலுள்ள இருபது மில்லியன் மக்களுக்காக 84,000 பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரிலும் அவரின் வழிகாட்டலிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
“பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் தமக்குத் தெரிந்த தமிழ் மொழியில் அங்கு வேலைகளை முடித்துக்கொள்ள இது இலகுவாக இருக்கும். இன ஐக்கியத்துக்காகவும் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
“கடந்த யுத்தத்தின் போது, பொலிஸார் மீது தமிழ் மக்கள் அதிருப்தியும் வெறுப்பும் கொண்டிருந்தனர். அதனால், பொலிஸாருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்குமிடையில் ஓர் இடைவெளி காணப்பட்டது.
“இன்று, அப்படியில்லை. பொலிருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நெருங்கிய உறவும் ஓர் இணைப்பும் உள்ளது.
“குற்றச் செயல்கள் நடக்கின்றபோது, பொதுமக்களின் ஒத்துழைப்புடன்தான் பொலிஸாரால் அவற்றைத் தடுக்க முடியும். குற்றச் செயல்கள் நடப்பதற்கு முன்னரே, அவைகள் பற்றித் தெரிந்தால், பொலிஸாருக்கு அறிவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனூடாக குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
“நம்மிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவமும் இன ஐக்கியமும் அவசியமாகும். நாம் எந்த மொழியைப் பேசினாலும் நாம் எந்த சமயத்தைப் பின்பற்றினாலும் நாம் இலங்கையர் என்ற வகையில் இணைந்து வாழ வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .