Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 மே 15 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்த காலத்தின் போது பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்கள், கிழக்கு மாகாணசபையால் முன்னெடுக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
மேற்படி தொண்டர் ஆசிரியர்களையும் ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றம், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (14) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் சேவையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள், நேர்முகத் தேர்வில் புறக்கணிக்கப்பட்டமை கவலைக்குரிய வியடம் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“அண்மையில் கிழக்கு மாகாணசபையால் நடத்தப்பட்ட தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் 455 பேர் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 163 தமிழ்த் தொண்டர் ஆசிரியர்களும் 55 சிங்கள தொண்டராசிரியர்களும் 228 முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களும் நியமனம் பெற்றுள்ளனர்.
“1999ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் யுத்தக் கட்டுப்பாட்டு அதிகஷ்ட பிரதேசங்களில் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் தமிழர்களே ஆவர்.
“ஆசிரியர்கள் போக முடியாத, வாகனங்கள் உட்செல்ல முடியாத, போக்குவரத்து பிரச்சினைகள் இருந்த நிலையில் அவர்கள் தங்களை அர்ப்பணித்து வேலை செய்தனர். அந்த நேரத்தில் இவர்களுடைய கடமை மிக முக்கியமானதாக இருந்தது. எந்தவிதக் கொடுப்பனவுகளுமின்றி, அவர்கள் தங்களுடைய சேவையை வழங்கியிருந்தனர்.
“அவர்கள் 2006,2007ஆம் ஆண்டுகளில் யுத்த நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்திருந்தார்கள். திருகோணமலையில் சம்பூர், கிளிவெட்டி, வெருகல், பள்ளிக்குடியிருப்பு போன்ற பகுதிகளிலிருந்த தொண்டர்ஆசிரியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்திருந்தனர். பலர் திருகோணமலை நகரை நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர்.
“இவ்வாறு இடம்பெயர்ந்தபொழுது அவர்களுடைய ஆவணங்கள் அழிவடைந்துவிட்டன.
“எனினும், தமிழ்த் தொண்டர் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளே கருத்தில் கொள்ளப்பட்டன. அதற்கு முன்னைய ஆண்டுகள் பார்க்கப்படவில்லை. 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளை மட்டுமே கருத்தில்கொண்டு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
“இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மிக அவசியமான காலத்தில் கல்விச் சேவையை வழங்கிய 200க்கும் மேற்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்விலிருந்து புறந்தள்ளப்பட்டு, நேர்முகத்தேர்வு முறைமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
“இதனை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
“தங்போது வெளியிடப்பட்டிருக்கின்ற தொண்டர் ஆசிரியர் நியமனங்களை நாங்கள் பிழையென்று சொல்லவில்லை. ஆனால், உள்வாங்கப்பட வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டு வெளியில் நிற்கின்றார்கள். காலத்தை இழுத்தடிக்காமல் இவர்களுக்குரிய நியமனங்கள் அதேதிகதியில் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
17 May 2025