2025 மே 17, சனிக்கிழமை

‘யுத்தம் வறுமை கவனிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட வேண்டும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூலை 21 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018அம்ஆண்டு, கிழக்கு மாகாணசபையின் வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக, ஒதுக்கப்பட்ட நிதி  தொடர்பாக கிழக்கு மாகாண இன விகிதாசாரம், யுத்தம், வறுமை, விசேட திட்டம், குறைவேலைகள் கவனிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் சிரேஷ்ர உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிதி ஒதுக்கீடுகள், தொடர்பில் உள்ள விமர்சனங்கள் பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடந்த காலத்தில் உத்தியோகபூர்வமாக மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பொறுத்த வரையில் பல ஆரோக்கியமான விமர்சனங்கள் உள்ளன.

“குறிப்பாக மாகாண சபையில் வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டு குறைந்தது பத்து தினங்கள் ஆளுநர் செயலகம், நிதிப்பிரிவு, திட்டமிடல் பிரிவு மூன்று பிரிவுகளின் வழிகாட்டலின் பேரில் ஆளுநர் செயலகம், பேரவைச் செயலகம், முதலமைச்சு, கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, வீதி அபிவிருத்தி அமைச்சு போன்ற பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று, அமைச்சின் செயலாளர்கள், திட்டமிடல் பிரிவு, ஏனைய உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பான முறையில் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரிய பங்களிப்பைச் செய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

“நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக சில சில இடங்களில் பகீரங்கமாகவும், இரகசியமாகவும், நீதியாகவும், நீதிக்கு முரணாகவும், விகிதாசார அடிப்படையிலும் வறுமையை செவி சாய்க்காத, யுத்தத்தைப் திரும்பி பார்க்காதா, சமச்சீரற்ற நிதி ஒதுக்கீட்டு முறை சில மக்கள் பிரதிநிதிகளால் அமுல்படுத்தப்பட்டது.

“குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களை குறிப்பிட்ட ஆண்டுகாலவரை ஆராய்ந்து பார்த்தால் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒரு முடிவிற்கு வர முடியும். கூடுதலாக தமிழ் பிரதிநிதிகள் தமிழ் பகுதிகளுக்கும், முஸ்லிம் பிரதிதிதிகள் முஸ்லிம் பகுதிகளுக்கும் கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்து வந்ததே வரலாறாகும். வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

“இதேவேளை, மத்திய அரசிடமுள்ள அமைச்சர்கள் யுத்தம், அபிவிருத்தியின் பேரால் தங்கள் கட்சிநலன் பார்த்து, பிரதேசம் பார்த்து, மாகாணத்திற்கான அமைச்சர்கள் என்பதை மறந்து, முழு இலங்கைக்கான அமைச்சர் என்பதையும் மறந்து, மூவினமக்களும் வாழ்கின்றார்கள் என்பதையும் மறந்து, சில அமைச்சர்கள் நிதி ஒதுக்கியதே வரலாறாகும்.

“ஒருசிலர் தவறான முறையில் நிதியை ஒதுக்கீடு செய்த மத்திய அரசினதும், மாகாண சபையினதும் மக்கள் பிரதிநிதிகள் விட்ட தவறுகளைப் போன்று 2018ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு இருந்து விடக் கூடாது.

“அதுமட்டுமின்றி 2017ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையில் செய்து முடிக்கப்பட்ட வேலைக்கென கிட்டத்தட்ட 80கோடிக்கு மேல் நிதி வழங்க வேண்டி உள்ளதாகவும்,  2018ம் ஆண்டு 275 கோடிக்குமேல் அபிவிருத்திக்கென நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த காலத்திற்கான நிதியை வழங்கினால் அண்ணளவாக 175 கோடிதான் 2018ஆம் ஆண்டுக்கு அபிவிருத்தி செய்ய முடியும்.

“இதற்கான நிதியைக் கூட வருட இறுதியில் அல்லது 2019ம் ஆண்டுக்கு வழங்க வாய்ப்புக்கள் உள்ளன. இப்படி நிதி நிலைமைகள் இருக்கும் போது இதைபொருட்படுத்தாது இனரீதியாகவும், கட்சி ரீதியாகவும் நிதிஒதுக்கீட்டு கொள்கைக்கு  முரணாக நிதி ஒதுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

“மத்திய அரசைப் பொறுத்தவரையில் வருடாவருடம் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் கிராம அபிவிருத்திக்கென ரூபாய் பத்து இலட்சம் ஒதுக்கப்பட்ட நிதியை 2018ம்ஆண்டு முழுமையாக நிறுத்தியது.

“இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலும் கிராம அபிவிருத்திக்கென வறிய கிராமங்கள் இருபது தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதிலும் முரண்பாடுகள் உள்ள சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தில் கடந்த வருடங்களை விட அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டது.

“கிழக்கு மகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக 144 வட்டாரங்களிலும், விகிதாசார தெரிவு  உட்பட மொத்தமாக 241 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஒரசதம் கூட உள்ளூராட்சி சபைக்கு விசேட அபிவிருத்திக்கென ஒதுக்கப்படாத நிலையில் அந்தந்த பிரதேசசபையின் வருமானத்தைக் வைத்துக் கொண்டு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசசபைகள் குடிநீரைக் கூட வழங்குவதற்கு நிதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

“உள்ளூராட்சி சபையின் பிரதிநிதிகளின் ஆர்வங்கள் சோர்ந்த நிலையில் மாகாண, மத்திய அரசு நடுத்தெருவில் அபிவிருத்தியை விட்டுச் சென்ற குற்றச்சாட்டு முன் வைக்கின்ற சூழ்நிலையில் கிழக்கு மாகாணசபை சவால்களுக்கு முகங்கொடுத்து 2018​ஆம் ஆண்டை நல்ல முறையில் நிதியை கொண்டு செல்ல வேண்டும்” என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .