வடிவேல் சக்திவேல் / 2018 ஜனவரி 29 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் அவ்வியக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சேர்ந்தே, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர்.
இது குறித்து, எம்மிடம் அவர்கள் கலந்தாலோசிக்கவும் இல்லை. அதன் பின்னர்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஒரு பயங்கரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியுமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு, களுதாவளை வடக்கு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, சனிக்கிழமை (27) இரவு களுதாவளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,
“முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், வடக்கு கிழக்கிலே உள்ள விதவைகளுக்கு உதவுதல் போன்ற பல காரணங்களுக்காகத்தான், நாம் தனித் தமிழ்க் கட்சி ஆரம்பித்துச் செயற்பட்டு வருகின்றோம். இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் வெற்றியானது, எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழனை முதலமைச்சராக்குவதற்கு வழிவகுக்கும்.பிள்ளையானை முதலமைச்சராக்கியது நான்தான். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு வழங்கிய வாக்கைக் காப்பாற்றுவதற்காகத்தான் கிழக்கில் 4 ஆசனங்களைப் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கினர்.
“யுத்தம் நிறுத்தப்பட்டதனால்தான் நமது இளைஞர்கள் எல்லாம் தற்போது உயிருடன் இருக்கின்றார்கள். இன்றுவரை யுத்தம் நடைபெற்றிருந்தால் அழிவுகள்தான் இடம்பெற்றிருக்கும். நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விடுதலைப் போராளிகளாகவே இணைந்தோம். பின்னர் நாம் பயங்கரவாதிகளாக மாறிவிட்டோம். ஏனெனில், இங்குவந்த இந்தியப்படையை நாம் அடித்து விரட்டினோம்“
“அதன் பின்னர் தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் சேர்ந்து எம்மிடமும் கேட்காமல் இந்தியத்தலைவர் ராயுக்காந்தியைக் கொலை செய்து விட்டார்கள். அதன் பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென இந்தியா அறிவித்தது” என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .