Niroshini / 2016 நவம்பர் 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் நள்ளிரவில் வீதிகளில் மாணவர்கள் அநாவசியமாக காரணமின்றி சுற்றித்திரிந்தால் அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்வதென காத்தான்குடி பொலிஸாருக்கும் காத்தான்குடி வர்த்தக சங்கத்துக்குமிடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பி.வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.நிசாந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, காத்தான்குடியில் கடந்த சில தினங்களாக வர்த்தக நிலையங்களில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இரவு நேர ரோந்து நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ளல், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை இரவில் வீதிக்கு செல்லும் போது கொண்டு செல்லல், 16 வயதுக்குட்பட்டவர்கள் இரவு 12 மணிக்கு மேல் வெளியே திரிந்தால் பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டு மறு நாள் பெற்றோரை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு விடுவித்தல், வீதிகளில் காத்தான்குடி பிரதான வீதியில் அநாவசியமாக வாகனங்கள் தரித்து நிற்பதை தடுத்தல், இரவு நேரங்களில் வீதிகளில் கூடி நின்று வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதை தடுத்தல் என்பவற்றுடன் பாடசாலைகளில் கல்விப் பொது தராதர சாதரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியவற்றில் கல்வி கற்பவர்களுக்கு விழிப்பூட்டல், கருத்தரங்குகளை நடாத்துதல் என இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாக காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.அஜ்வத் தெரிவித்தார்.
அத்தோடு, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக காத்தான்குடி வர்த்தக சங்கத்துடன் இணைந்து விழிப்பூட்டல் செய்தல்வேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
53 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
21 Dec 2025