Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று பிரதேச சபையின் வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கல்குடாத் தொகுதி செயற்குழு உறுப்பினர் முஹம்மத் றிழா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1928ஃ26ம் இலக்க 2015 ஓகஸ்ட் 21ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 14 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்களின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.
இதில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் முஸ்லிம் பிரதேசங்கள் 4 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரப் பிரிப்பு தொர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கோறளைப்பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் உள்ளடங்குகின்ற பிரதேசங்கள் 14 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 14 பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வண்ணம் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் 04 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை முஸ்லிம், பிறைந்துரைச்சேனை வடக்கு, பிறைந்துரைச்சேனை தெற்கு, செம்மண்ணோடை ஆகிய பெயர்களில் இந்நான்கு வட்டாரங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு வட்டாரங்களும் ஏழு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி பிரிக்கப்பட்டுள்ளது. 25,000 அதிகமான முஸ்லிம்கள் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் மிக நெரிசலாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வேழு கிராம சேவகர் பிரிவுகளிலும் சுமார் 16,000 வாக்காளர்கள் உள்ளனர்.
16,000 முஸ்லிம் வாக்களர்களுக்கு நான்கு வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ள அதேவேளை 11,000 வாக்குகளை கொண்ட வாகரைப் பிரதேச சபைக்கு 10 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோறளைப்பற்று மத்தி பிரதேச சபைக்கான தனியான கோரிக்கை முன்வைக்கப்பட்டுவரும் இத்தருணத்தில் இவ்வுதாரணத்தை தான் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், செம்மண்ணோடை என்ற வட்டாரத்தில் உள்ளடங்கும் கிராமங்களான மாவடிச்சேனை, செம்மண்ணோடை என்பன தனித்துவமான பண்பை கொண்டுள்ள வேளையில் இரு பிரதேசங்களையும் ஒன்றிணைத்துள்ளமை காலத்திற்குப் பொருத்தமற்றது என்பதுடன் வாழைச்சேனையின் முக்கிய பகுதி பிறைந்துரைச்சேனையுடன் இணைக்கப்பட்டு பிறைந்துரைச்சேனை வடக்கு என்ற வட்டாரமும் உருவாக்கப்பட்டுள்ளது முரண்நகையை தோற்றுவித்துள்ளன.
எனவே, வட்டாரப் பிரிப்பில் எவ்வாறு சாதி, இன வகைப்பாடுகள் கைக்கொள்ளப்படுகின்றதோ அதேபோன்று பிரதேச மக்களின் தனித்துவம் கைக்கொள்ளப்படல் என்பதை தாங்கள் வலியுறுத்திவருகின்றோம். இதற்கமையவே எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் வாழைச்சேனை முஸ்லிம் பகுதிக்கு இரண்டு வட்டாரங்களும், பிறைந்துரைச்சேனைக்கு இரண்டு வட்டாரங்களும், மாவடிச்சேனை தனிவட்டாரமாகவும், செம்மண்ணோடை தனிவட்டாரமாகவும் வகைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago