2025 மே 07, புதன்கிழமை

வடக்கு, கிழக்கு சுகாதாரத்துறையை மேம்படுத்த முன்னுரிமை: அமைச்சர் ராஜித்த

Kanagaraj   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

எதிர்வரும் வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் சுகாதார மேம்பாட்டிற்காக அதிகளவு நிதியை ஒதுக்கீடுசெய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர் இலங்கையின் இரண்டாவது புற்று நோய் வைத்தியசாலையை திறந்துவைத்தார்.

சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புற்றுநோய் வைத்தியசாலையில் ஒரேநேரத்தில் 80பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதி வசதி, வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி,  மாதாந்த கிளினிக் நடத்துவதற்கான வசதி ஆகின அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் உட்பட பல்வேறு பகுதி மக்கள் வந்து சிகிச்சைபெற்றுச்செல்லும் வகையில் இந்த புற்றுநோய் வைத்தியசாலை மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்

இன்று நான் இரண்டு நோக்கங்களுக்காக இங்கு வந்திருக்கின்றேன். ஒன்று புற்றுநோய்ப்பிரிவையும் நிர்வாக பிரிவையும் திறந்து வைப்பதற்காகவாகும். இது கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அவசியமானதொன்றாகும். இது மஹரகம புற்றுநோய்பிரிவுக்கு அடுத்ததாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது புற்றுநோய்ப்பிரிவாகும். இரண்டாவதாக அவசர சிகிச்சைப்பிரிவுக்கும் விபத்துப் பிரிவுக்குமான அடிக்கல்லை இடுவதற்காகவாகும்.

ஒவ்வொரு மாகாணத்திலும் குறைந்தது ஒரு அவசரசிகிச்சைப்பிரிவு மற்றும் விபத்துப் பிரிவையாவது அமைப்பது எமது அமைச்சினுடைய நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும். அத்துடன் பொது வைத்தியசாலைகளிலும் ஆதார வைத்திய சாலைகளிலும் இரத்த வங்கிகளை அமைப்பதும் எமது நோக்கமாகும். மிக விரைவில் இத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இப்புற்றுநோய் வைத்திய பிரிவை அமைப்பதற்காக 188மில்லியன் ரூபாவையும் நிர்வாக பிரிவை அமைப்பதற்காக 66மில்லியன் ரூபாவையும் செலவிட்டிருக்கின்றோம். இவ்வருடம் கட்டடங்கள் இயந்திரங்களின் பராமரிப்பிற்காகவும் குளிரூட்டிகளை பொருத்தல் போன்றவற்றிற்காகவும் 56மில்லியன் 150ஆயிரம் ரூபாவை செலவிட்டிருக்கின்றோம்.

புதிய அரசாங்கமானது இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதியை சுகாதாரத்துக்கும் கல்விக்கும் ஒதுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வருகின்ற வருடத்தில் உங்களுடைய தேவைகள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும்.

எதிர்வரும் ஆண்டில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் கூடிய கவனம் செலுத்தப்பட்டு,அதிகளவான நிதியை சுகாதார துறைக்கு ஒதுக்கீடுசெய்யப்படும்.கடந்த 30வருட கால யுத்ததினால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்ட பகுதி என்பதன் காரணமாக இங்கு சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X