2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘வடக்கு, கிழக்கில் எந்தவித தடைகளுமின்றி மாவீர்களுக்கு அஞ்சலி’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 டிசெம்பர் 02 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவிதத் தடைகளுமின்றி உணர்வுபூர்வமாக மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது நல்லாட்சியை அரசாங்கத்தில் நல்லெண்ண செயற்பாட்டின் வெளிபாடாகவே நான் கருதுகிறேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் சமூக அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மாவீரர் தினத்தை வடக்கு, கிழக்கு பகுதிகளில் பரிபூரணமாக அனுட்டிப்பதற்கு தடை விதிக்காதமை நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ணப்பாங்கே தவிர இலங்கையுள்ள தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்கி விட்டோம் என்று சர்வதேசத்துக்கு காட்டும் செயலாக அமையக் கூடாது.

“மாவீரர்களை நினைவு கூருவது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். 1983ஆம் ஆண்டுகளில் நாட்டில் பெரும் கிளற்சியை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் உயிரிழந்த அனைத்து வீரர்களையும் வருடா வருடம் நினைவு கூருகின்றார்கள்.

“அதேபோன்று, இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்ற தமிழர்கள் மாவீரர்களாக இந்த மண்ணில் விதைக்கப்பட்ட தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். நல்லாட்சி அரசு அந்த கடமையைச் செய்துள்ளது. இந்த நடைமுறை தொடர்ந்து இருக்க வேண்டும். ஆட்சிகள் மாறலாம் மாவீரர் தினத்தை மக்கள் அனுஸ்டிப்பதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது தடை செய்யக் கூடாது.

“கடந்த காலங்களில் படையினர் பல வழிகளிலும் இதனைத் தடுத்தனர். இந்த வருடம் உணர்வு பூர்வமாக அனுட்டிப்பதற்கு எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை இதே போன்று இனிவரும் காலங்களிலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு அரசு எந்த தடையும் விதிக்கக் கூடாது”  என்றார்

நாடாளுமன்ற உறுப்பினரின் 2017ஆம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஏறாவூர் பற்று பிரதேசத்துக்கு 18 திட்டங்களுக்கு 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தார். இதில் 14 அமைப்புகளுக்கு 7 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் ஜோர்ஜ் அன்டனி அன்டனிராஜ், விளையாட்டுக் கழகம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X