2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘வடக்கு, கிழக்கில் போதைப்பொருட்களை கடந்த அரசாங்கமே விதைத்து இருந்தது’

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடிவேல் சக்திவேல்  

கடந்த அரசாங்கம், முப்படைகளின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், போதைவஸ்துப் பாவனையை விஸ்தரித்து இருந்தது. பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளில் படையினரால் போதைப்பொருட்கள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு,

அவை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டன என்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சினூடாக, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கிராமத்திலுள்ள 6 பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

மட்டக்களப்பு, களுதாவளை மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் இந்த நிகழ்வு திங்கட்கிழமை (11) நடைபெற்றது. 

இதன்போது இலங்கைக்கான சீனா தூதரகத்தின் பிரதி தூதுவர் திருமதி சாங் உள்ளிட்ட, கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

இராஜங்க அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  

போருக்குப் பின்னர் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் பின்னதள்ளப் பட்டிருக்கின்றன. ஆனால், அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் மலையகத்தை உள்ளடக்கி செயற்படுகின்றது.  

ஆனால், எனது அமைச்சினூடாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம் யுத்தத்துக்குப் பின்னர் கல்வியில் பின்தங்கிய மாகாணமாக, வடமாகாணம் விளங்குகின்றது. இதனையிட்டு வெட்கப்படுகின்றோம். எனவே, கல்வியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கடந்த அரசாங்கம் எமது பகுதிகளில் கல்வி முதல் அனைத்து விடையங்களையும் ஸ்தம்பிக்கச் செய்தனர். வடக்கு, கிழக்கை வெளிநாடுகளில் காட்டியே, கடந்த அரசாங்கம், நிதியைக் கொண்டு வந்து, தங்களுடைய மாவட்டங்களைத்தான் அபிவிருத்தி சொய்து கொண்டிருந்தது.  

அவ்வாறான, ஆட்சியை மாற்றுவதற்குப் போராடி, நல்லாட்சியை தற்போது நாம் கொண்டு வந்துள்ளோம். கடந்த காலத்தில் எமது மண்ணுக்காகப் போராடினோம், இன்று கல்விக்காகப் போராடி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் அதிகளவு வறுமையான மாணவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அவை வெளியில் கொண்டு வரப்படுவதில்லை, தற்போது இப்பகுதிகளில் கல்வியை மேம்படுத்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். நல்லாட்சிக்காலத்தில் எமது பகுதிகளில் கல்வியை முன்நிலைப்படுத்த வேண்டும். இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக விளங்குகின்றது.  

அந்நிலையில் கல்வியை முன்னிலைப்படுத்தினால் எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களாக, இன்றைய சிறுவர்கள் விளங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கல்வியிலும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு இன்னொரு நியாமாகத்தான் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, அனைவரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனாலும், இனவாதத்தை தூண்டி செயற்பட்டால் சுயமாகத்தான் நன்மையடைவோம் மாறாக ஒட்டுமொத்த நாட்டுக்கு வருகின்ற வேவையிலிருந்து நாம் பாதிப்படைந்து தள்ளப்படுவோம்.  

கடந்த கால அரசாங்கம் அவர்களது குடும்பங்களின் நலங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டு வந்துள்ளது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தில் தான், சர்வதேசம் மதிக்கத்தக்க தலைவர்கள் இருந்த செயற்பட்டு வருகின்றார்கள்.  

எமது சொந்த நிலங்களுக்குச் செல்வதற்கு கடந்த அரசாங்கம் விடவில்லை தற்போது எமது நல்லாட்சி அரசு வடக்கு, கிழக்கில் பல நிலப்பரப்புகளை விடுவித்துள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது தமிழ் போசும் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எமது பிரதேசத்தில் எமது மக்கள் வாழாது ஏனைய இடங்களிலிருந்து வந்து இங்கு குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  

எமது மக்களுக்குரிய வீட்டு வசதிகள் இல்லை. இந்நிலையில் வேறு மாகாணங்களிலிருந்து இங்கு வந்து குடியமர்த்துவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் இனவாதமாகத்தான் நான் பார்க்கின்றேன் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.  

கடந்த காலத்தில் கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்காக வேண்டி அப்பகுதி மக்களை விடுவித்து செயற்படக்கூடாது அப்பகுதிக்கு நான் சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடினேன் அங்கு மக்களுக்கு வீட்டுதிட்டங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அங்குள்ள மக்கள் அரசியல் கட்சிகள் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றார்கள். சிறுபான்மையின மக்களால் கொண்டு வந்த இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எமது மக்கள் பாதிப்படைவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

எமது நிலங்கள் எவ்வாறு சூறையாடப் படுகின்றதோ அதுபோன்றுதான் எமது கல்வியும் சூறையாடப்பட்டு வருகின்றது. மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கமரத்தப்படுகின்றார்கள், சிறுவயத்தில் போலியான பிறப்புச்சான்றிதழைப் பெற்று மட்டக்களப்பிலிருந்து பலர் வெளிநாடு செல்கின்றார்கள்.

வடக்கில் யுத்தத்துக்குப் பின்னர் சிறுவர்கள் பெட்டிக்கடைகளில் வேலை செய்கின்றார்கள். இவ்வாறான விடயங்களை அடையாளம் கண்டு எமது அரசாங்கம் தடுத்து நிறுத்தி செயற்பட்டு வருகின்றது. 

 கடந்த அரசாங்கம், முப்படைகளின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போதைவஸ்த்து பாவனைகளை விஸ்தரித்து இருந்தது. பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளில் படையினரால் போதைவஸ்த்துகள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு அவை பாடசாலை மாணவர்களுகன்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு எமது மாணவர்கள் அடிமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பல கடைகளை நாம் அடையாளம் கண்டு மூடியிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X