2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘வன்முறைகளைத் தோற்றுவிப்போர் மீது நடவடிக்கை எடுக்காமை வேதனை’

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்,  எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

“மட்டக்களப்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும், வன்முறைகளைத் தோற்றுவிப்போர் மீது நடவடிக்கை எடுக்காது, நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றமை வேதனையளிக்கிறது” என, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் நகரசபை மண்டபத்தில், நேற்று (30) சம்மேளனம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதன் தலைவர் விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித், இதனைத் தெரிவித்தார்.

அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சம்மேளனத் தலைவர் மேலும் கூறியதாவது,

“சகவாழ்வைக் கெடுத்து, மீண்டும் இந்த நாட்டில் குழப்பத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்த முனைந்து நிற்கும் தீய சக்திகளின் நடவடிக்கைகளை, நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.

“பொலிஸார், இந்த நாட்டிலுள்ள சட்டதிட்டங்களை மதித்து, இன, மத வேறுபாடின்றி, தமது கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்.

“அதன் மூலம்தான், இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்குமான பாதுகாப்பை வழங்க முடியும்.

“2007ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த நாட்டிலே துளிர்விடத் துவங்கிய சமாதானத்தின் பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்திலே சிறுபான்மையின உறவு காத்திரமானதாக உறுதியானதாக கட்டியெழுப்பப்பட்டு வருவதை, நாங்கள் காண்கின்றோம்.

“மட்டக்களப்பு மாவட்டத்திலே அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் புரியும் இடங்கள், கல்விக் கூடங்கள் பல்கலைக்கழகங்களில் இன வேறுபாடுகள் இல்லாமல், மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் புரிந்துணர்வோடும் பணியாற்றுகின்ற ஆரோக்கியமானதொரு சூழல் இருந்து வருகின்றது.

“சமாதானத்தை, இன ஐக்கியத்தை, அபிவிருத்தியை விரும்பும் சிறுபான்மையின மக்கள், இவ்வாறு விஷம சக்திகளால் ஏற்படுத்தப்படும் இனவெறுப்பு நடவடிக்கைகளை, வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.

“எனவே, சிறுபான்மையினச் சமூகங்களிடையே உள்ள இன ஐக்கியத்தை விரும்பும் அத்தனை நல்லுள்ளங்களையும் இணைந்து பணியாற்றுமாறும் சமூக உறவைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுமாறும் வீணான குழப்பங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்குமாறும், வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

“கடந்தகால யுத்ததத்தால் நாம் இழந்த சமாதானம், கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி என்பன, மீண்டும் முழுவீச்சில் இடம்பெற, புரிந்துணர்வான இன ஐக்கியம் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

“அவ்வப்போது விஷமிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகளால், இயல்புநிலை சீரழிந்து போவதை, நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

“அரசாங்கமும் பொலிஸாரும், இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டும். பேஸ்புக் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற இனவெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X