2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் குழந்தை பலி; இருவர் படுகாயம்

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி - பழுகாமம் சந்தியில், நேற்று (02) பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில், களுமுந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த சதீஸ்வரன் தஷ்சன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கென்டர் ரக வாகனமும் ஓட்டோவும் மோதிக்கொண்டமையால் இடம்பெற்ற இவ்விபத்தில், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினம், குறித்த ஓட்டோ, களுமுந்தன் நோக்கிப் பயணித்த போது, நெல்மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, அம்பளாந்துறையை நோக்கிப் பயணித்த கென்டர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ஓட்டோவில் தனது தாயருடன் பயணித்த மேற்படி குழந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் குழந்தையின் தாயும் ஓட்டோ ஓட்டுநரும் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கென்டர் வாகனத்தைச் செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வேகமாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X