2025 மே 03, சனிக்கிழமை

விரிவுரையாளர் இன்பமோகன் பேராசிரியரானார்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி வ.இன்பமோகன் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். 
 
இவர் மட்டக்களப்பு குருக்கள் மடம் கிராமத்தில் வடிவேல் பாக்கியம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். குருக்கள் மடம் கிராமத்தில் அமைந்துள்ள கலைவாணி மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை பெற்றார்;. 
 
இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசார பீடத்தின் முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் மறைந்த மெய்யியல் பேராசிரியரான சோ.கிருஷ்ணராஜா அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ்பூர்த்தி செய்திருந்தார்.
 
பேராசிரியர் வ.இன்பமோகன் அவர்கள் ஈழத்தக் கூத்து மரபு, கிழக்கிலங்கைச் சடங்குகள், இலங்கை வேடுவர் சமூகம், இந்தியக் கலைகள், சினிமா, தமிழ் நாட்டாரியல் என்பவற்றை பிரதான அய்வுத் துறையாகக் கொண்டு பல ஆய்வு நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடடுள்ளார்.
 
இவரால் வெளியிடப்பட்ட நூல்கள் பின்வருமாறு: கிழக்கிலங்கைச் சடங்குகள், இந்தியக் கலையும் இரசனையும், கலைத்துவ சினிமா, கூத்துப் பண்பாடு, இலங்கையில் வேடர் வாழ்வியலும் மாற்றங்களும், மரபுக்குப் பின் மட்டக்களப்பின் நாடகங்கள், நுண்கலைஓர் அறிமுகம், இந்தியக் கட்டிடக்கலை.
 
பதிப்பித்த நூல்கள்: குருக்கேத்திரன் போர் வடிமோடிக் கூத்து, சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து, ஐரோப்பிய மெய்யியல் வரலாறு, சைவ சித்தாந்தம் மறுபார்வை அறிவாராய்ச்சியியல், நாட்டார் வழக்காற்றில் சடங்குகளும் சமூக மரபுகளும் என்பன.
 
இவற்றுள்; கிழக்கிலங்கைச் சடங்குகள் (2012), கலைத்துவ சினிமா (2012), சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து (2018), கூத்தப் பண்பாடு (2019) என்பன கிழக்கு மாகாண சபையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதுகளைப் பெற்றவை.
 
பாரம்பரிய கூத்துக்களைப் பேணும் அவரது முயற்சிகளில் ஒன்றாக குருக்கள் மடம் கிராமத்தில் கடந்த மூன்று தசாப்தங்களின் பின்னர் குருக்கேத்திரன் போர் வடிமோடிக் கூத்து (2016ஆம் ஆண்டு), சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து (2018ஆம் ஆண்டு) ஆகிய பாரம்பரிய கூத்துக்களைப் பயிற்றுவித்து அரங்கேற்றியமையைக் குறிப்பிடலாம்.
 
மற்றும் இலங்கையில் இருந்து வருடம் இருமுறை வெளிவரும் பிரதான ஆய்வுச் சஞ்சிகைகளில் ஒன்றான “மொழிதல்” சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராகச் செயற்படுகின்றார்.
 
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவராகக் கடமையாற்றிய இவர் தற்போது கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பட்டப்பின் படிப்புக்கள் கற்கைப் பிரிவின் இணைப்பாளராகவும் சேவையாற்றி வருகிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X