2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'சிவப்பு' நடத்துநரால் பலரும் மயங்கினர்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கதவுகளைக் கொண்ட அந்த பஸ் விபத்தில் காயமடைந்திருந்த பயணிகளை நோக்கி, உடல் முழுவதும் சிவப்பாகி இருந்த கோலத்தில், அந்த பஸ்ஸின் நடத்துநரே எழும்பிவந்தமையால், சம்பவத்தில் காயமடைந்திருந்த பயணிகளில் சிலர் மயங்கிவிழுந்துள்ளனர். அத்துடன், காப்பாற்றுவதற்கு வந்திருந்த சிலர், அலறியடித்துக் கொண்டு ஓட்டமும் எடுத்துவிட்டனர்.

நாவலப்பிட்டி கோணவலையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (இ.போ.ச) பஸ்ஸொன்று கடந்த 5ஆம் திகதியன்று விபத்துக்குள்ளானது. இதன்போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அந்த பஸ்ஸில், மேரிவில தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர், தன்னுடைய இரண்டு வயதுப் பிள்ளையுடன் பயணித்துள்ளார்.

நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்று திரும்பிகொண்டிருந்தபோது, அப்பெண்ணுக்கு துணையாக அவருடைய கணவனும், ஒரே ஆசனத்தில் அமர்ந்து பயணித்துகொண்டிருந்துள்ளனர்.

அப்போதுதான், கோணவலை எனுமிடத்தில் வைத்து, அந்த பஸ் திடீரெனக் குத்துக்கரணமடித்து விபத்துக்குள்ளாகியது. பயணிகளில் பலரும், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக, வெளியில் தூக்கியெறிப்பட்டனர்.

இன்னும், சிலர் பஸ்ஸுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டனர். சிறுவர்கள், கைகுழந்தைகளும் தூக்கிவீசப்பட்ட நிலையில், அருகிலிருந்த பற்றைக்குள்ளிருந்து பின்னர் காப்பற்றப்பட்டனர்.

இந்நிலையில், பஸ்ஸில் பயணித்த அந்தப்பெண்ணும் காயமடைந்துள்ளார். அத்துடன், தனது இரண்டு வயதுப் பிள்ளையையும் தவறவிட்டுவிட்டார். எனினும், இரத்தம் வடிவதையும் பொருட்படுத்தாது, பிள்ளையும் கணவனையும் அப்பெண் தேடிக்கொண்டிருந்துள்ளார்.

அங்கு, குழுமியவர்களும் காயமடைந்தவர்களை, வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதில், தீவிரமாகச் செயற்பட்டுகொண்டிருந்தனர்.

அப்பொழுதுதான், கீழ் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்த நிலையில், அந்த பற்றைக்காட்டுக்குள்ளிருந்து, உடல் முழுவதும் சிவப்பு நிறத்தால் தோய்ந்திருந்த நிலையில், ஒருவர், காயமடைந்தவர்களை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் சகலருமே பயந்துவிட்டனர். காயமடைந்தவர்களில் சிலர், மயங்கிவிட்டனர். காப்பாற்றுவதற்கு வந்திருந்தோரில் பலர், ஓட்டமெடுத்துவிட்டனர்.

எனினும், அங்கிருந்தவர்களிடம் பேசிய, அந்த சிவப்பு நபர், நான், இந்த பஸ்ஸின் நடத்துனர். பயணிகளில் யாரோ, தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு, தன்னுடைய வீட்டை அழகுபடுத்துவதற்கு சிவப்பு நிறத்திலான பெயின்டை வாங்கிசென்றுள்ளார். அந்த பெயின்டே, என்னை இந்தக் கோலத்துக்கு ஆளாக்கிவிட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அப்போதுதான், தங்களுக்கு போனமூச்சு வந்ததை போல இருந்து என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .