2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இ.தொ.கா வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஜனதா தோட்ட அபிவிருத்திசபை, அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கின்றன என்றும் அறிவித்துள்ளது.

மேற்படி பிளாண்டேசன்கள் நிர்வகிக்கும், கண்டி, மாத்தளை, மொனராகலை போன்ற  பிரதேசங்களில் உள்ள தோட்டங்கள் அனைத்திலும் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை  மத்திய வங்கி;க்கு அனுப்பாமல் மோசடி செய்தமைக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பிளாண்டேசன்கள் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கைநிதி ஆகியவற்றை  மத்திய வங்கி;க்கு அனுப்பாமல் மோசடி செய்துள்ளது.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளதாவது:-

ஓய்வு காலத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கும், குடும்ப ரீதியான அவசர, அவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும், தொழிலாளர்கள் இந்த நிதியை நம்பியிருக்கிறார்கள். எனினும், இந்த நிதிகள் யாவற்றையும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இ.தொ.கா இதற்கு உரித்தான தொழில் இலாகாவுக்கும், தொழில் அமைச்சுக்கும் பல தடவைகள் சுட்டிக் காட்டியும், எழுத்து மூலமும் பேச்சு வார்த்தையின் ஊடாகவும், நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவைகள் பலனளிக்கவில்லை.

இதை தவிர, இ.தொ.கா பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகேக்கும் விரிவான கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அக்கடிதத்தில் பாதிக்கப்பட்ட மேற்குறித்த தோட்டத் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தாது இந்த நிதிகளை செலுத்துவதற்கான துரித நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சருக்கு அவசர வேண்டுகோள் விடுத்தும், எவ்வித பலனுமற்றுப் போய்விட்டது.

இந்த தொழிலாளர்களிடமிருந்து நிர்வாகங்கள் இப்பணங்களை அவர்களின் சம்பளத்தில் அறவிடப்பட்டு வந்த போதிலும், மத்திய வங்கிக்கு அனுப்பாமல் பெருந்தொகை நிதிகள் மோசடி செய்துள்ளமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும். இந்நிதிகளை கணக்கிலிடும் போது சுமார் 1000 மில்லியன் ரூபா என மதிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கண்டி, ஹந்தானை தோட்டத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா சேவைகாலப்பணம், தொழிலாளர்களுக்கு செலுத்தப்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய இ.தொ.கா நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பரீட்சாத்தமாக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

அதன்; விளைவாக குறித்த தொழிலாளர்களுக்கு ஆறு வாரத்திற்குள் சேவைகாலப்பணத்தை செலுத்த வேண்டும் என்று நிபந்தனையை கண்டி, ஹந்தானை தோட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் காலக்கெடுவை விதித்துள்ளது.

 இது எமக்கு கிடைத்த வெற்றி என கருதுகின்றோம். இது போன்ற ஏனையவற்றையும் இ.தொ.கா பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான் நூற்றுக் கணக்கான அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை, அரசபெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றுக்கு வழக்குகளை வெகுவிரைவில் தொடர்வதற்கு இ.தொ.கா ஆலோசனை செய்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .