2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தம்புள்ள கோயில் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்: பிரபா கணேசன்

A.P.Mathan   / 2013 நவம்பர் 02 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் தகர்க்கப்பட்டது நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைக்கம் செயலாகும். இருப்பினும் இப்பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது. இதற்கான மாற்று திட்டமொன்றின் மூலமாக நீதி கிடைக்க வேண்டும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இச்சம்பவம் தொடர்பாக இதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிடம் நேரடியாக எனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டேன். பிரதமரும் இச்சம்பவத்திற்கு பொறுப்பான குறிப்பிட்ட அந்த விகாரையின் புத்தபிக்குவின் செயலுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் புத்தபிக்கு பத்திரகாளியம்மன் ஆலய வளாகம் பௌத்த விகாரைக்கு சொந்தமானது எனவும் அங்கே இந்து ஆலயம் அமைக்கப்பட விடமாட்டோம் என்றும் பிடிவாதம் பிடிப்பதாகவும் அதை மீறி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமேயாயின் சிங்கள மக்களை வைத்து பிரச்சினையை பெரிதுபடுத்துவேன் என்று பயமுடுத்துவதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.

அதே நேரம் இந்து ஆலயம் அமைப்பதற்கு மாற்று இடத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார். இருப்பினும் இருசாராரையும் வைத்து பேசி ஒரு இணக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தொடர்ச்சியாக அப்பகுதியிலேயே மேலதிக பிரச்சினைகள் வராமல் இருக்கும் என்று தான் கருதுவதாக தெரிவித்த அவர் என்னை இரு தரப்பினரிடம் பேசுமாறும் தெரிவித்தார்.

எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்பு நேரில் சென்று பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் எதிர்ப்பார்க்கின்றேன். சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்டு வாழும் இப்பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செய்ல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிறுபான்மையினருக்கு நேர்மையான முறையில் இந்நாட்டில் நீதி கிடைக்காது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அரசாங்கத்தையும் மீறி சிங்கள பௌத்த இனவாதம் தலைதூக்கியுள்ளது.  இதனை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்காவிட்டால் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் இந்த பௌத்த இனவாதிகளே காரணமாகிவிடக்கூடும் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் உடனடியாக ஊடகங்களில் எனது கண்டனத்தை தெரிவித்துவிட்டு பெயர் வாங்கி விடலாம். அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றேன். இதன் மூலமாகவே இவ்விவகாரத்தில் எமது மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என நினைக்கின்றேன்" என்றார்.

  Comments - 0

  • VALLARASU.COM Sunday, 03 November 2013 02:36 PM

    இப்படி அறிக்கை விடச்சொல்லி யார் சொல்லி தந்தது முகா தலைவரா? பள்ளிகள் உடைக்கும் போது அவர் இப்படித்தான் அறிக்கை விடுவார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X