2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

இந்திய பிரதமர் - மலையக அரசியல் தலைவர்கள் சனியன்று சந்திப்பு

Kogilavani   / 2015 மார்ச் 13 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தென்னிலங்கையிலுள்ள மலையக தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இடையில், சனிக்கிழமை (14) மாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வி.ராதாகிருஷ்ணன் மற்றும் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோர், இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்றும் மனோ கணேசன் கூறினார்.

இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இலங்கையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தியாவிலும் புதிய அரசொன்று ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. இந்த யதார்த்தங்களின் அடிப்படையில் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படும் சாத்தியம் தோன்றியுள்ளது. அதேபோல், இங்கே தமிழர்கள் மத்தியிலும் புதிய அரசியல் தலைமைத்துவ அறிகுறிகள் தோன்றியுள்ளன' என்றார்.  

அத்துடன், 'இவ்விரு அரசுக்களின் மத்தியிலான உறவின் உள்ளடங்கலாக, இங்கே வாழும் இந்தியாவின் தொப்புள் கொடி உறவு கொண்ட நமது மக்களுடன், இந்திய அரசு தனது உறவுகளை பலப்படுத்த வேண்டும். இந்த பின்னணியில் இலங்கையில் உருவாகிவரும் நல்லாட்சிக்கான சூழல், நாடு முழுவதும் வாழும் தமிழ் மக்களை அரவணைத்திட இந்திய அரசு துணை செய்ய வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய சமூக நிலைமைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக பாரத நாட்டுக்கு வரலாற்று ரீதியான தார்மீக கடப்பாடு இருக்கின்றது.

இந்த விடயங்களை நாம் பிரதமர் நரேந்திர மோடியின்  நேரடி கவனத்துக்கு கொண்டு வருவோம்' என்று மனோ கணேசன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .