2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

சம்பள உயர்வுக்கான பேச்சு ஒத்திவைப்பு?

Kogilavani   / 2015 மார்ச் 19 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில் தேயிலை, இறப்பர் என்பவற்றின் விலைகள் பாரிய வீழ்ச்சிகண்டுள்ளதால்  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.

'பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள், தங்களது வாழ்வில் முன்னெப்போதும் கண்டிராத பாரியதொரு முன்னேற்றகரமான நல்லாட்சி செயற்பாடுகளை எமது அரசு மேற்கொண்டு வருகின்றது. இன்று பெருந்தோட்டதுறை மாத்திரமின்றி முழு நாட்டு மக்களினதும் வாழ்க்கைச் சுமையை எமது அரசு குறைத்திருகின்றது' என்றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் புதிய சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தையை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பித்து, புதிய சம்பள ஏற்பாடுகளை செய்யவேண்டிய தேவை உள்ளது. ஆனால், இன்று உலக சந்தையில் தேயிலை, இறப்பர் என்பவற்றின் விலைகள் பாரிய வீழ்ச்சி கண்டிருக்கின்றன. இதனால் இப்பேச்சுவார்த்தையை ஓரிரு மாதங்களுக்கு ஒத்திப்போடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொழிற்சங்க மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர்களான நான், அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் இராதாகிருஷ்ணன்; ஆகிய மூவரும் நல்ல புரிந்துணர்வோடும் இணக்கப்பாட்டோடும் செயற்பட்டு வருகின்றோம்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக அரசியலில் பொது வேலைதிட்டமொன்றை முன்னெடுத்து, புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளோம். இது எம்மக்கள் மத்தியில் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கின்றது.

காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும்போது, தொழிற்சங்கம் மற்றும் அரசியல் பாகுபாடின்றி ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் அனைவரும் உள்வாங்கப்படுவார்கள்.

100 நாட்கள் வேலைத்திட்டத்தில் அனைவருக்கும் ஓரே தடவையில் இதனை செய்து முடிக்க முடியாது. இத்திட்டம் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் பூரணத்துவம் பெற சிறிது காலமெடுக்கும். அதுவரை மிக மோசமான நிலையிலுள்ள குடியிருப்புக்களின் கூரைகளை மீளமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும். இந்நடவடிக்கைகளுக்கு அனைவரும் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .