Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழ் முற்போக்கு கூட்டணி மீது, மலையகத் தமிழர் வைத்துள்ள நம்பிக்கையை எதிர்வரும் தேர்தலின் மூலம் வெளிப்படுத்துவார்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, டிக்கோயாவில் நேற்று, நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“தலைவர் திகாம்பரம் கூட்டாக இணைந்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டு எண்ணக்கருவின் அடிப்படையில் இன்றுதான் மலையகம், பாரிய மாற்றங்களை அனுபவித்து வருகின்றது.
கடந்த 200 வருடங்களாக லயங்களில் வசித்து, தேயிலைக்கு தன் உதிரத்தை உரமாக்கிக் கொடுத்த எம் மலையக மக்களுக்கு, எட்டாக்கனியாக இருந்த தனி வீட்டுத்திட்டம், இன்று முதல கட்டமாக சுமார் 375 வீடுகளோடு பூர்த்தி அடையூம் நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அந்த தனிவீடுகள் மக்களின் கரங்களில் கிடைக்கப்போகின்றன.
எமது மலையக மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாக தனிவீட்டுத்திட்டம் காணப்படுகின்றது.
மக்களுக்கு இன்று புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. 200 வருட கால மாறாத வடுக்களைக் கொண்ட எமது மக்கள், இன்றுவரை தற்காலிக வீடுகளிலும் தற்காலிக குடிநீர்த் திட்டங்களையும் தற்காலிக மலசலக்கூடங்களையும் தற்காலிக பள்ளிக்கூடங்களையூமே எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கென நிரந்தர தீர்வொன்றையோ, நிரந்தர வாழ்விடத்தையோ முழுமையாக பெற்றுக் கொடுக்க எந்தந் தலைமையும் முயற்சிக்கவில்லை.
இந்த மாறாத வடுக்களையும், கறைகளையும் இல்லாதொழிக்கவே, தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 10 ஆண்டுகளில் எமது மக்களுக்கான நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக 10 ஆண்டு அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்த முன்வந்துள்ளது. தனித்தனி வீடுகளுடன் சகல வசதிகளையும் கொண்ட கிராமங்களை உருவாக்கி எம் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கப் போகின்றது. அதற்கான அத்திவாரத்தையும் வெற்றியுடன் நிறைவேற்றியுள்ளது.
எனவே, ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்து எம் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்களும் தயாராகுங்கள். இத்திட்டத்தின் நாயகர்களான எமது தலைமைகளுக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பாரிய வரலாற்று மாற்றத்துக்கு நீங்களும் பங்காளர் ஆகிக் கொள்ளுங்கள். எதிர்வரும் தேர்தலில் தலைவர் திகாம்பரம், தலைவர் இராதாகிருஸ்னண் மற்றும் திலகராஜ் ஆகியோரை நுவரெலிய மாவட்டத்தில் தெரிவுசெய்து மலையக மாற்றத்துக்கு வித்திடும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்' என அவர் மேலும் கூறினார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago