2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இயற்கை அனர்த்த நிலைமைகளால் தற்காலிக வீடுகளில் நீண்டகாலமாக வசித்து வருகின்ற 3,250 தோட்டக் குடும்பங்கள், பல படிமுறைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் பாதுகாப்பான இடத்தில் மீண்டும் குடியேற்றும் நோக்கில் 'இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை' 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம்2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, பயனாளிக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாய்களாவதுடன், 2025 ஆம் ஆண்டில் 1,300 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனறாகலை போன்ற மாவட்டங்களில் தகைமை பெற்றுள்ள 495 பயனாளிக் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத எஞ்சிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை 2027.12.31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தல் மற்றும் இடைக்கால வரவு செலவு சட்டகத்தில் அதற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X