Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது நாட்டின் அரசமைப்புக்கமைய இணை அனுசரணை வழங்கும் வகையிலான ஒப்பந்தத்துக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுத்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதற்கும் கலப்பு நீதிமன்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றார்.
ஐ.நாவின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய, சகல நாடுகளிலும் சமமான முறையிலேயே இறைமை காணப்படுகின்றது. அவ்வாறாயின், ஏனைய நாடுகளால் கொண்டு வரப்படும் சட்டங்களை, எமது நாட்டிலும் கொண்டுவருவதற்குக் கட்டுப்பட வேண்டுமெனக் கேட்ட அவர், அமெரிக்காவிடம் இருக்கும் சட்டத்துக்குமேல் வேறொரு சட்டமொன்றை இணைக்குமாறு கோரிக்கை விடுத்தால் அவர்கள் அதனைச் செய்வார்களா? பிரிட்டனுக்கு கூறினால் அதனை செய்வார்களா? எனக் கேட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெறுப்புணர்வு தொடர்பான பேச்சுக்களுக்கு எதிரான சட்டம் நாட்டில் இல்லையென அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுவிஸ்சிலாந்து தூதுவருக்கு தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் நிலைபாடா எனக் கேட்ட விஜயதாஸ ராஜபக்ஷ, அதற்கு ஆகக் குறைந்தது சபை முதல்வராவது பதிலளிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், இலங்கையில் தண்டனை சட்டக் கோவை 135 வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது என்றார்.
1883ஆம் ஆண்டில் பிரித்தானிய காலத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான பேச்சானது இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கும் குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், இவ்வாறான நிலைமையில் சர்வதேசத்திடம் இங்கு அவ்வாறான சட்டம் இல்லையென கூறுகின்றனர் என்றார்.
இவ்வாறான சட்டம் இங்கு இல்லையென கூறுவது மனித உரிமைகள் பேரவையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் இது முழு நாட்டின் பிரச்சினையாகவும் மாறும். இதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள் எனக் கேட்ட அவர், நீதி அமைச்சராக தான் இருந்த போது அமைச்சரவை பத்திரம் மூலம் குறித்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைத்தோம் என்றார்.
அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்துக்குச் சென்றனர். அதன்போது அதனை நிறைவேற்ற முடியாது போனது. அதனை எதிர்த்தவர்களே இன்று சர்வதேசத்திடம் வெறுப்புணர்வு பேச்சுக்களை தடுக்க சட்டமில்லை என கூறுவது பாரதூரமான விடயமாகுமெனத் தெரிவித்த அவர், இலங்கைக்கு எதிரான யோசனைகளின் போது இந்த விடயம் தொடர்பாகவும் கருத்திற்கொள்ளும் வகையில் அந்த தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றார்.
இம்முறை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2015ஆம் ஆண்டில் இணை அனுசரணை வழங்கிய யோசனையை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம், அவ்வாறு செய்யமுடியாது எனத் தெரிவித்த அவர், நாடு தற்போது சர்வதேச ரீதியில் பெரிய பொறிக்குள் சிக்கியுள்ளது. எமது நாட்டின் சிலருக்கு காலனித்துவ மனநிலையிலிருந்து விலக முடியாது அவர்களின் யோசனைகளுக்கு இணங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
அன்று எமது வெளிவிவகார அமைச்சர் முன்னெடுத்த வேலைத்திட்டங்களால் முழு நாட்டையும் சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், யுத்தத்தின் போது கட்டளையிட்ட ஜனாதிபதி முதல் இராணுவத்தின் அதிகாரிகள், சிப்பாய்கள் வரை அவர்களின் உயிர்கள் தற்போது ஆபத்தில் இருக்கின்றன என்றார்.
இதன்படி, தான்தோன்றித்தனமாக நாட்டு மக்களின் எதிர்காலத்தை இருளடைய செய்யாது மக்கள் தொடர்பாக சிந்தித்து திட்டமிட்டு செயற்படுவதற்கான பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்றார்.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago