2026 மே 09, சனிக்கிழமை

dd

அலகொல்ல தோட்ட மக்களின் 7 ஆயிரம் கடிதங்கள் ​தேக்கம்

எம். செல்வராஜா   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலகொல்ல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள், கடந்த பல வருடங்களாக விநியோகிக்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன.  

இக்கடிதங்கள் பொதிகளாக்கப்பட்டு, தோட்டத்தின் தேயிலைத் தளிர்கள் நிறுக்கும் கட்டடத் தொகுதி, தோட்ட முன்பள்ளி, தோட்டக் களஞ்சியசாலை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன.  

சமூக ஆர்வலர்கள் சிலர், இந்த மூடைகளைப் பிரித்துப் பார்த்தபோதே, அலகொல்ல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய கடிதங்கள் பல விநியோகிக்கப்படாமல் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். 

இக்கடிதங்கள் அனைத்தும், உடபுஸ்ஸலாவை பிரதான அஞ்சல் நிலையத்தின் மூலம், மேற்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியவை என்றும் ஆனால், அஞ்சல் விநியோகிப்பவர்கள், தோட்ட நுழைவாயிலில் அமைந்திருக்கும் மேற்படி கட்டடத் தொகுதியில் இவற்றை வைத்து விட்டுச் செல்வதாகவும் தெரியவருகின்றது.  

இந்தப் பொதிகளில், சாதாரண கடிதங்களைத் தவிர, அரச வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்கள், இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள், போட்டிப் பரீட்சை ஆகியவற்றுக்கான கடிதங்கள், நகை அடகு வைத்து ஏல விற்பனைக்கு விடப்படும் கடிதங்கள், காப்புறுதிக் கடிதங்கள், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான கடிதங்கள், மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் கடிதங்கள், நீதிமன்ற வழக்குகளுக்கு அழைப்பிக்கும் அழைப்பாணைக் கடிதங்கள் போன்ற முக்கியக் கடிதங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அலகொல்ல பெருந்தோட்ட நிர்வாகம், சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக, தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய கடிதங்கள் பல இக்குவியலில் காணப்படுவதாகவும் உடபுஸ்ஸலாவ பிரதான அஞ்சல் நிலையத்தினூடாகவோ உப அஞ்சல் அவலகங்கள் ஊடாகவோ, தோட்ட அலுவலகம் ஊடாகவோ, தொழிலாளர்களுக்கான கடித விநியோகங்கள் இடம்பெறுவதில்லை என்றும் இதனால், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தது.  

இது குறித்து, உடபுஸ்ஸலாவ அஞ்சல் நிலைய அதிபரிடம் வினவிய போது, இது பற்றி விசாரணைகளை மேற்கொள்வதாக கூறினார்.  

பதுளை மாவட்ட பெருந்தோட்டங்கள் பலவற்றிலும், இதுபோன்ற அவல நிலைகள் தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில், அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என, தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .