Janu / 2026 மார்ச் 01 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளில் நிலவும் கடுமையான வறட்சிக்கு மத்தியில், பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் மானா பற்றைகளுக்கு விஷமிகளால் தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் நீர் ஆதாரங்கள் மற்றும் வனவிலங்குகள் பெரும் அழிவை எதிர்நோக்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் வறண்ட வானிலையைப் பயன்படுத்தி, நீர் மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களை அண்டிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டு வருகிறது. பொழுதுபோக்குக்காகவும், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களே இத்தீ வைப்பு சம்பவங்களை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தேசிய நீர் மின் உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் மவுசாக்கலை, காசல்ரீ மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு நீர் வழங்கும் காடுகள் மற்றும் மானா பற்றைகள் தீக்கிரையாக்கப்படுவதால், அவற்றின் நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன.
நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்களின் (01) காலை நிலவரப்படி, மவுசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முறையே நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து 10 மற்றும் 15 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் இதேபோன்று வேகமாகக் குறைந்து வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறான தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
செ.தி.பெருமாள்

4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago