2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கம்ப மரத்தில் இருந்து விழுந்தவர் மரணம்

Janu   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில்  நடைபெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின் இறுதி நிகழ்வான கம்ப மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (27) காலை இடம்பெற்றதுடன் அந்த கம்ப மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தைச்  சேர்ந்த எம்.சதாசிவம் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில்  சனிக்கிழமை (26) இரவு ஆரம்பிக்கப்பட்ட பொன்னர் சங்கர் கூத்து மறுநாள் முடியும் தருவாயில் திறந்தவெளியில் தயார் செய்யப்பட்டிருந்த 50 அடிக்கு அதிகமான உயரமான மரக்கட்டையில் இணைக்கப்பட்ட மர ஏணியில் (கம்ப மரம்) ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிளாஸ்கோ  தோட்டத்தில் ஆண்டுதோறும் இந்த பொன்னர் சங்கர் கூத்து  நடாத்தப்படுவதாகவும், இரவு முழுவதும் நடந்த நாடகத்தின் பின்னர் காலையில் பொது வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கம்ப மரத்தில் பெரிய காந்தி எனும் கதாபாத்திரம் அதில் ஏறி சில நிமிடங்கள் தவம் செய்து பூஜை செய்ததன் பின்னர் அதிலிருந்து இறங்குவார் என்றும் அதுபோலவே குறித்த நபர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தமை நானுஓயா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால்  அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பி.கேதீஸ், எஸ் சதீஸ் ,செ.திவாகரன்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X