2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

“கூட்டணி உறுப்பினர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர்”

Kogilavani   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“மலையகத் தமிழ் மக்கள், ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடியவகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டங்களை, தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் பயன்படுத்தி வருகின்றமை, வரலாற்று திருப்புமுனையாகும்” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான கூட்டம், ஹட்டன் டி .கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,

“1977 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைகளில் தமிழ் அமைச்சர்கள் இடம்பெற்று வந்துள்ளனர். ஆனால், இந்த அமைச்சரவைகளில் மலையகத் தமிழ் மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை உட்பட பல உரிமைகள் குறித்து தமிழ் அமைச்சர்கள் வினைத்திறனுடன் செயற்படவில்லை.

“ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களான ப.திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோர் மலையகத் தமிழ் மக்களின் சார்பாக அமைச்சரவையில் பல பத்திரங்களைச் சமர்ப்பித்து, ஆக்கப்பூர்வமான தீர்மானங்களைப் பெற்றுத்தருகின்றனர்.

“அந்தவகையில் தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கு வரலாற்றில் முதற்தடவையாக காணியுரிமைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

“அதேபோல நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. இவ்வாறு எமது மக்கள் சார்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகள் நிறைவேற்றப்படுகின்றமை, மலையக அரசியலில் ஒரு திருப்பு முனையாகும்.

“எனவே, 200 வருடகால வரலாறைக் கொண்ட மலையகத் தமிழ் சமூகத்துக்குத் தற்போதுதான் தூய காணியுரிமை கிடைக்கப்போகின்றது.

இதற்கேற்ப முதற்கட்டமாக 6,800 குடும்பங்களுக்குக் காணியுறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை, அனுமதி வழங்கியுள்ளதென்பது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்களின் அர்ப்பணிப்பாகும்.
ஆகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களால் ஹட்டனில் வைத்து எதிர்வரும் 29ஆம் திகதி காணியுறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் சகலரும் கலந்துகொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .