2026 மே 09, சனிக்கிழமை

சமுர்த்தி பயனாளிகள்; நுவரெலியா மாவட்டத்துக்கு அநீதி?

Editorial   / 2020 பெப்ரவரி 15 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதில் மக்கள் பிரதிநிதிகள் அக்கறை காட்டவேண்டுமே தவிர அதனை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கக்கூடாதென தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச செயலாளரும் கெர்கஸ்வோல்ட் கீழ் வட்டார அமைப்பாளருமான சுப்பையா கமலதாசன் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் கெர்கஸ்வோல்ட் கீழ் வட்டார பிரதேச சபை உறுப்பினர் சரோஜா, லெட்சுமி கீழ் வட்டாரத்தில் சமுர்த்தி பயனாளிகள் பக்கசார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்வைத்த பிரேரனை தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2018ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் 39 ஆயிரத்து 775 பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 364 ​பேர் வாழும் வலப்பனை பிரதேசத்தில் 11 ஆயிரத்து 671 பயனாளிகளுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

 95 ஆயிரத்து 539 பேரைக்கொண்ட ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் 8 ஆயிரத்து 832 பயனாளிகளும், ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 364 மக்கள் சனத்தொகை கொண்ட கொத்மலை பிரதேசத்தில் 8 ஆயிரத்து 605 பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், 2 இலட்சத்து 28 ஆயிரத்து 890 மக்கள் சனத்தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 5 ஆயிரத்து 513 பயனாளிகளும் 2 இலட்சத்து 22 ஆயிரத்து 14 மக்கள் சனத்தொகை கொண்ட அம்பகமுவை பிரதேசத்திலும் வெறும் 5 ஆயிரத்து 154 பயனாளிகளுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பார்க்கும்போது வலப்பனை பிரதேசத்தில் 9 பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலும் ஹங்குராங்கெத்தை, கொத்மலை பிரதேசத்தில் 11 பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலும் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில், 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட அம்பகமுவை, நுவரெலியா பிரதேசத்தில் 40 பேருக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்தநிலைமையே 2018ஆம் ஆண்டு வரை காணப்பட்டது. 2019ஆம் ஆண்டு இந்த நிலைமையினை மாற்றம் கண்டுள்ளது.

33 ஆயிரத்து 884 குடும்பங்களை கொண்ட 22 கிராம சேவக பிரிவுகளுக்கு அம்பகமுவை பிரதேசத்தில் நோர்வூட் பிரதேசத்துக்கான வங்கி உரித்துடையதாக செயற்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்திலேயே அதிக பிரதேசங்களை வேலை பிரதேசமாக கொண்ட வங்கி நோர்வூட் வங்கி. இருப்பினும் நுவரெலியா மாவட்டத்திலேயே முதலாவது வங்கியாகவும் நோர்வூட் வங்கி காணப்படுகின்றது. இவ்வாறு செயற்படுகின்ற வங்கிக்கு எம்முடைய ஒத்துழைப்பை வழங்கி மேலும் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும். அதனையே நாங்களும் செய்கின்றோம்.

இதற்கென எங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. எங்களுடைய சொந்த பணத்தில் சமுர்த்திக்கான விண்ணப்பபடிவங்களை பிரதி செய்து மக்களிடம் விழிப்புணர்வூட்டி அவர்களுக்கான இந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க ஒத்துழைக்கின்றோம். விண்ணப்பங்கள் வழங்கியதும் அதனை சமுர்த்தி உத்தியோகத்தர்களே நேர்மையான முறையில் தெரிவு செய்கின்றனர்.

இதனை மக்கள் பிரதிநிதி என்று தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ரூபாய்க்கேனும் ஒரு வேலையும் செய்யாத பிரதேச சபை உறுப்பினர் சரோஜாவும் செய்திருக்கலாம். அதைவிடுத்து சபையில் கொக்கரிப்பது கையாளாகாதத்தனம். இலங்கையிலேயே மிகபெரிய கிராம சேவக பிரிவு கெர்கஸ்வோல்ட் கிராம சேவர் பிரிவு. இதுவரை ஏறத்தாழ 12 ஆயிரம்  மக்கள் வாழும் பிரதேசத்தில் வெறும் 50 பயனாளிகளே தெரிவு செய்யப்பட்டனர்.

இன்று அதனை மாற்றி 271ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவுமே போதுமானதில்லை. எதிர்வரும் காலங்களில் இந்த பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க முயற்சிக்க வேண்டுமே தவிர கிடைத்ததை இல்லாதொழிக்க முயற்சிக்க கூடாது. நுவரெலியா மாவட்டத்திலேயே முதன்மை வங்கியாக செயற்படுகின்ற நோர்வூட் வங்கி ஆகக்குறைந்தது நோர்வூட் மஸ்கெலியா என அதிகரிக்கப்பட வேண்டும்.

நோர்வூட் புதிய பிரதேச செயலகம் வரும்பட்சத்தில் பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, அப்கொட் என அதிகரிப்பட வேண்டும். இதற்கு ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கி செயற்பட மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும். சபையில் வெத்து பிரேரனை கொண்டும்வரும் நேரத்துக்கு சில பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த வங்கிகளை அதிகரிக்கும் பிரேரணைகளை  கொண்டவந்து ஆக்கப்பூர்வமாக செயற்படவும் முடியும்.” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .