Kogilavani / 2021 ஜனவரி 01 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கூட்டுஒப்பந்தப் பேச்சுகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், தோட்டத் தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமையால் நேரடி சந்திப்புகளை மேற்கொள்ள முடியாவிட்டாலும் சூம் செயலிக்கூடாக பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கலாம் என்றும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், உலகளாவிய ரீதியில் முக்கியமான பேச்சுவார்த்தைகள், சூம் செயலியூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 11ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு, ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில், இன்று (1) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், 'அரசியல் ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெற்றத் தலைவராக இருந்து, மலையக மக்கள் முன்னணியை அமரர் சந்திரசேகரன் கட்டியெழுப்பிய காரணத்தால், அந்த அமைப்பின் ஊடாக அவரது பெயர் நிலைத்து நிற்கின்றது' என்றார்.
'பலரை அரசியல் ரீதியாக வளர்த்துவிட்ட பெருமை சந்திரசேகரனுக்கு இருக்கின்றது. அதைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் இன்றும் துடிப்புடன் கொள்கைப் பிடிப்போடு செயற்பட்டு வருகின்றார்கள். எனவே, இந்தக் கட்சியிலிருந்து யார் பிரிந்துச் சென்றாலும், அமரர் சந்திரசேகரனின் பெயரை நிச்சயம் நிலைத்து நிற்கச் செய்வோம்' என்றார்.
'அமரர் சந்திரசேகரன் உயிரோடு இருந்து அரசியல், தொழிற்சங்கம் செய்த காலத்தில் இருந்த பிரச்சினைகள் இன்று வித்தியாசமாகக் காணப்படுகின்றன. 1992ஆம் ஆண்டு தோட்டங்கள் கம்பனிகளுக்கு கைமாற்றப்பட்ட பிறகு தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இருந்து வருகின்றது.
'கடந்த 5 வருடங்களாக 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு கூட்டுஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டும் ஆயிரம் ரூபாய் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்படவில்லை.
'சம்பள உயர்வு தொடர்பாக இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இணக்கம் எட்டப்படவில்லை. இந்நிலையில் 'கொவிட் – 19' காரணமாக சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு காலம் இழுத்தடிக்கப்படும்போது, தொழிலாளர்களுக்குதான் இழப்பு ஏற்படும் என்பதை மறந்து விடக்கூடாது.
'ஏனெனில், இறுதியாக செய்துகொள்ளப்பட்ட இரண்டு, கூட்டு ஒப்பந்தங்களிலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணம் கிடைக்கவில்லை. கூட்டுஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் திகதியிலிருந்து தான் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, கூட்டுஒப்பந்தம் கால தாமதம் ஆகும் போது அதனால் பாதிக்கப்படப் போவது தொழிலாளர்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது.
'உலகளாவிய ரீதியில் 'கொரோனா' பரவல் காரணமாக சந்திப்புகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உலகத் தலைவர்கள் சூம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்கள். அதேபோல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு முக்கியமான ஒன்று என்பதைக் கவனத்திற்கொண்டு இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அதைவிடுத்து 'கொரோனாவை' காரணம் காட்டி பேச்சுவார்த்தையை இனிமேலும் இழுத்தடிக்கக் கூடாது' என்றும் தெரிவித்தார்.




2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago