2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திருமணமாகாத தாயும், பக்கத்து வீட்டு தந்தையும் கைது

Editorial   / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

அக்கரப்பத்தனை, ஹென்போல்ட் ஜி.எல்பிரிவில் உள்ள தோட்டத்தொழிலாளர் வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறம் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் சிசுவின் சடலம் தொடர்பில்,  சிறுமியின் தாயும் முச்சக்கரவண்டியின் சாரதியும் அக்கரபத்தனை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை  (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சிசுவின் தாயார் 24 வயதான திருமணமாகாத பெண் எனவும், இவர் முச்சக்கரவண்டி சாரதியுடன் (28) தொடர்பு வைத்திருந்தவர் எனவும், முச்சக்கரவண்டி சாரதி திருமணமானவர் என்றும் அவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார் என்பதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

சிசுவை பிரசவித்த சந்தேகநபரான அந்த பெண், சந்தேகநபரான  முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டுக்குப் பக்கத்தில் வசிப்பதாகவும், அவர் மாவனெல்ல பிரதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில், சந்தேகநபரான முச்சக்கரவண்டியின் சாரதி, தனது சகோதரனுடைய முச்சக்கரவண்டியில் மாவனல்லை பிரதேசத்திற்குச் சென்று அவரை அக்கரப்பத்தனை தோட்டத்துக்கு  அழைத்து வந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.  

 சிசு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு  சில நாட்களாகி இருந்ததாகவும், குழந்தையின் கழுத்தில் கம்பி ஒன்று இருந்ததாகவும், எனவே, இது படுகொலையா என்பது  பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த முச்சக்கரவண்டி சாரதியின் தாய் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பொலித்தீன் பையில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா பதில் நீதவான்  விஜேவிக்கிரமவினால் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்குமாறு அக்கரபத்தனை பொலிஸாருக்கு பணித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X