2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வாக ’ரூ.25ஐ பெற்றுக்கொடுக்க சதி’

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்     

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம், அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாயும் 25 நாட்கள் வேலையும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அவ்வாறு இல்லாதபட்சத்தில் தொடர் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மஸ்கெலியாவில், இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாவும் 25 நாட்கள் வேலையும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்' என்றும் தெரிவித்துள்ளார். 

'அதனை வென்றெடுப்பதற்காக ஆயிரம் ரூபாய் இயக்கம் உட்பட பல அமைப்புகளும் எம்முடன் கைகோர்த்துள்ளன. இதுவரை 20க்கும்  மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்ற யோசனை 2014இல் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டன. இதற்கு கம்பனிகள் உடன்படவில்லை. இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வெறும் 20 ரூபாயே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

'உற்பத்திக் கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு, தேயிலை விலைக்கான கொடுப்பனவு போன்றன கம்பனிகளுக்கு சாதகமாக உள்ளன. எனவே, அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்றே அன்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியிருந்தார்.

'இந்நிலையில் கம்பனிகள் முன்வைத்துள்ள புதிய யோசனையில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளன. தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவாக 25 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதன்படி தற்போது 750 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் 775 ரூபாவை பெறும் நிலை உருவாகும். அப்படியானால் வெறும் 25 ரூபாயை மட்டுமே சம்பள உயர்வாக பெற்றுக்கொடுப்பதற்கான மோசடிகள் இடம்பெறுகின்றன. இதற்கு உடன்பட முடியாது. தொழிலாளர்களின் கோரிக்கை உரிய வகையில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்' என்று எச்சரித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X